ஜூன் மாதம் முதல் அஜித் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று தயாரிப்பாளர் தியாகராஜன் தெரிவித்தார்.
சிவா இயக்கத்தில் அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'வேதாளம்'. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்திருக்கிறார். 2015 தீபாவளி அன்று வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. வசூலில் இதுவரை எந்த ஒரு தமிழ் படமும் பண்ணாத சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.
அஜித்தின் அடுத்த படம் ஜூன் 2016ல் தான் தொடங்கப்படும் என்பதும் சிவா இயக்க இருக்கிறார் என்பதும் உறுதியானது.
இந்நிலையில் இப்படத்தை தயாரிக்க இருக்கும் சத்யஜோதி தியாகராஜனிடம் இதுகுறித்து கேட்டபோது, "நான் - அஜித் - சிவா மூவருமே இணைந்து படத்தின் முதற்கட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். அஜித்துடன் நடிக்கவிருப்பவர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் யாரெல்லாம் அஜித்துடன் நடிக்கவிருக்கிறார் என்பது உறுதி செய்யப்படும்.
ஏப்ரல் 2ம் வாரத்தில் படம் குறித்த முறையான அறிவிப்பு வெளியிடப்படும். ஜூன் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கப்படும்" என்று தெரிவித்தார். இப்படத்துக்கு அனிருத் இசை, வெற்றி ஒளிப்பதிவு செய்யவிருப்பது உறுதியாகியுள்ளது.