தமிழ் சினிமா

காதலி, மனைவி எல்லாமே சினிமாதான்! - சிம்பு நேர்காணல்

ஆர்.சி.ஜெயந்தன்

சிம்பு நடித்துள்ள ’மாநாடு’ திரைப்படம் வரும் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அப்போது, பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஆர்.பிரபு, கோ.தனஞ்செயன் என திரையுலக பிரமுகர்கள் திரண்டு வந்து சிம்புவை பாராட்டினர். அந்த மேடையில் சிம்பு சட்டென்று உடைந்து கண்கலங்கினார். ‘இந்து தமிழ் திசை’க்காக அவரை சந்தித்துப் பேசியதில் இருந்து..

விழா மேடையில் சட்டென்று கண் கலங்கியது ஏன்?

இது எனக்கு எமோஷனலான படமாகிவிட்டது. சிம்பு படம்னாலே பிரச்சினைதான்னு பரப்பிவிடுறதை பலர் வழக்கமாக வச்சிருந்த நேரத்துல, என்னைப் பற்றி நல்லா தெரிஞ்ச, தைரியமான ஒரு தயாரிப்பாளர் இருந்தா நல்லா இருக்கும்னு நினைச்சேன். அப்போ சுரேஷ் காமாட்சிதான் என் கண்ணுக்கு தெரிஞ்சார். தொடங்கினதுமே படம் நின்னுபோய், மறுபடியும் தொடங்கினோம். தயாரிப்பாளருக்கு இது மிகப்பெரிய படம். அவரது நல்லெண்ணத்துக்காக, இரவு பகல் பார்க்காம கடுமையா வேலை செஞ்சு, படப்பிடிப்பு நாட்களை பாதியாக குறைச்சோம். ரசிகர்களுக்கு ஒரு நல்ல படத்தை கொண்டுவந்து ரிலீஸ் வரைக்கும் தில்லா நிறுத்திட்டார். அதை நினைச்சு உணர்ச்சி வசப்பட்டு கலங்கிட்டேன்.

அறிவியல் புனைக் கதையில் சிம்பு நடித்திருக்கிறார் என்று தெரிந்தபோது ஆச்சரியமாக இருந்தது. எப்படி இந்த மாற்றம்?

சினிமா நிறைய மாறிக்கிட்டே வருது.உலகில் எங்கோ எடுக்கிற பிறமொழிப் படங்களை இங்கே தமிழ் சப்-டைட்டில், தமிழ் டப்பிங்கில் பார்த்து ரசிகர்கள் மிரண்டுபோறாங்க. அதேபோல, நம்ம படங்களையும் பிறமொழிக்காரங்க பார்க்கறாங்க. ஓடிடியால ரசிகர்களது ரசனையின் எல்லை விரிஞ்சு கிடக்கு. புதுசா எதிர்பார்க்கிறாங்க. அவங்ககிட்ட இன்னமும் காதல், மோதல்னு சினிமாத்தனமா கதைவிட்டா எடுபடாது. அதை புரிஞ்சுக்கிட்டு உருவாகியிருக்கு ‘மாநாடு’ படம். ‘டைம் லூப்’ கதைக் களம். ஆனால், ஒரே காட்சி மீண்டும் வரும்போது, அதுல ஹீரோ இந்த முறை என்ன பண்ணுவார்ங்கிற எதிர்பார்ப்பு ரகளையா அமையும்போது ரசிகர்களை துள்ளிக் குதிக்க வைக்கும். அதில் அரசியலும் சேர்ந்துகிட்டா எவ்ளோ சூடா இருக்கும்னு நினைச்சுப் பாருங்க. தமிழில் அரசியல் களத்துல வர்ற முதல் அறிவியல் புனைவும் இதுதான்.

காதல் மன்னனாக சந்தோஷமாக திரிஞ்ச சிம்பு எங்கே?

அவன் சின்னப் பையன். அந்த வயசுக்குரிய கொண்டாட்டங்களுக்கு அவன் எண்ட் கார்டு போட்டு பல வருடங்கள் ஆகுது. இப்போதுள்ள சிம்பு வளர்ந்து பக்குவப்பட்டவன். வாழ்க்கை அவனுக்கு பல பாடங்களை கத்துக்கொடுத்திருக்கு. அந்த வகையில, உள்ளுக்குள் என்னை நான் சரிசெய்துகொண்டிருக்கிறேன். அதில் ஒன்றுதான் என் உடலில் உபரியாக இருந்த எடையை கழித்துக் கட்டியது. ஆன்மிகம், நண்பர்கள் உதவியோட உடல், மனம் எல்லாம் இப்போது எடை குறைவாக, நிர்மலமாக இருக்கு.

புது சிம்புவிடம் என்ன எதிர்பார்க்கலாம்?

நல்ல படைப்புகளை எதிர்பாருங்க. இதுவரை 47 படங்களில் நடித்திருக்கிறேன். 50-வது படம் வரை ஓய்வின்றி நடிப்பில் மட்டுமே எனது கவனம் இருக்கும். ‘வெந்து தணிந்தது காடு’படம் முடியும் கட்டத்துக்கு வந்துவிட்டது. முன்னணி இயக்குநர்கள் பலரிடம் கதைகள் கேட்டு இறுதி செஞ்சிருக்கேன். அவங்க தற்போது இயக்கிக்கொண்டிருக்கும் படங்களை முடிச்சுட்டு வரும்போது, வரிசையாக நாங்க அடுத்தடுத்து இணைவோம். இனி என் காதலி, மனைவி எல்லாம் சினிமாதான்!

SCROLL FOR NEXT