தமிழ் சினிமா

ஹேக் செய்யப்பட்ட பார்த்திபனின் முகநூல் பக்கம்

செய்திப்பிரிவு

நடிகர் பார்த்திபனின் முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்த படம் 'ஒத்த செருப்பு'. படம் முழுவதும் பார்த்திபன் என்கிற ஒற்றைக் கதாபாத்திரம் மட்டுமே இடம் பெற்றிருந்தது. இந்தப் படம் விமர்சன ரீதியாகப் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறப்பு நடுவர் தேர்வுக்கான தேசிய விருதையும் வென்றது.

தற்போது இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கை பார்த்திபன் இயக்கி வருகிறார். இப்படத்தில் நாயகனாக அபிஷேக் பச்சன் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இது தவிர ‘இரவின் நிழல்’ என்ற படத்தையும் பார்த்திபன் இயக்கியுள்ளார். இப்படம் முழுக்க ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இன்று தனது முகநூல் பக்கம் முடக்கப்பட்டுள்ளதாக பார்த்திபன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பார்த்திபன், “என் முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டிருக்கிறது. அறிவுள்ளவன் படமெடுக்கலாம். அறிவு மிகுந்தவர் ரசிகராகலாம். ஆனால் அறிவுக்கே பிறந்த சில இனிய எதிரிகள் ஹேக் செய்கிறார்கள். அதை எதிர்கொண்டு அந்த அரக்கர்களை வதம் கொள்ள சற்றே நேரம் தேவை. அதுவரை அவ்விளம்பரங்களுக்காக என்னை மன்னியுங்கள்” என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT