‘ஜெய் பீம்’ பட விவகாரத்தில் இயக்குநர் ராஜீவ் மேனன் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெய் பீம்'. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்தனர். விமர்சன ரீதியாகவும் இந்தப் படம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை அவமதிக்கும் விதமான காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறி, அது தொடர்பான அறிக்கையை பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் சூர்யாவுக்கு எதிராகக் கண்டனக் குரல்கள் எழுந்தன.
இந்த எதிர்வினைகளைத் தொடர்ந்து சூர்யாவுக்கு ஆதரவாக இயக்குநர் பாரதிராஜா, டி.ராஜேந்தர், உஷா ராஜேந்தர், அமீர், வெற்றிமாறன், சத்யராஜ் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்திருந்தனர். அந்த வகையில் தற்போது இயக்குநர் ராஜீவ் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
'' ‘ஜெய் பீம்’ மிக முக்கியமான படம். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் சட்டக் கட்டமைப்பிற்குள் எவ்வாறு நீதி வழங்கப்படுகிறது என்பதைக் காட்டி அனைவருக்கும் நம்பிக்கையை அளிக்கிறது. எனவே ‘ஜெய் பீம்’ பாருங்கள். ஒரு படத்தை விமர்சிப்பது சரிதான். ஆனால், அப்படத்துக்குத் தடை கோருவதும், கொலை மிரட்டல் விடுப்பதும் கண்டிக்கத்தக்கது''.
இவ்வாறு ராஜீவ் மேனன் கூறியுள்ளார்.