குதிரை தாக்குதல் சம்பவத்தை சுட்டிக்காட்டி பாஜக எம்.எல்.ஏ. வை ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக சாடியிருக்கிறார் நடிகை த்ரிஷா.
உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் மாநில அரசுக்கு எதிராக பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, பாஜக எம்எல்ஏ கணேஷ் ஜோஷி, சக்திமான் என்ற குதிரையை தாக்கினார். இதனால் கால் முறிந்ததால் சக்திமானால் இனி சொந்த காலில் நிற்பது கடினம் என கூறப்படுகிறது. சக்திமானுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சக்திமான் குதிரை நிலை குலைந்து கீழே விழுந்து கிடப்பது போன்ற புகைப்படங்கள் மற்றும் செய்திகள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வந்தார்கள். இச்செயலால் மிகவும் கோபமடைந்த த்ரிஷா, "மிகவும் வெட்கக்கேடான செய்கை. நீங்கள் நரகத்துக்குச் செல்ல நான் இறைவனை வேண்டுகிறேன்" என்று காட்டமாக தெரிவித்திருக்கிறார்.
விலங்குகள் நல அமைப்பின் விளம்பர தூதராக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருப்பவர் த்ரிஷா. மேலும், தெரு நாய்கள் நலவாழ்விற்காக பல்வேறு பிரச்சாரங்களிலும் ஈடுபட்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.