ஓய்வுபெற்ற காவல் அதிகாரி பாரிராஜன் (பிரகாஷ் ராஜ்). இவர் தனது மகன் ராஜீவுக்கும் (ஆர்யா), பக்கத்து வீட்டுப் பையன் சோழனுக்கும் (விஷால்) பள்ளிப் பருவத்திலேயே காவல் துறையில் சேர்வதற்கான பயிற்சிகளை அளிக்கிறார். தன் மகனைவிட அறிவுக்கூர்மையுடன் இருக்கும் சோழனை பாராட்டுகிறார். அதனால், சோழன்மீது ராஜீவுக்குள் வன்மம் துளிர்க்கிறது. இந்த சூழலில் நடைபெறும் எதிர்பாராத சம்பவத்தால் நண்பர்கள் பிரிகின்றனர். வளர்ந்து இளைஞர்கள் ஆன பிறகு மீண்டும் சந்திக்கின்றனர். இப்போது காலம் அவர்களை எதிரிகளாக எதிர் எதிர் திசையில் நிறுத்துகிறது. யார் வெல்கிறார் என்பது கதை.
நண்பர்கள் எதிரிகளாகும் ‘ஸ்டீரியோ டைப்’ ஒருவரி கதைக்கு சுவாரஸ்ய திரைக்கதை எழுதியிருக்கிறார் இயக்குநர் ஆனந்த் ஷங்கர். ஆனால், பல காட்சிகள்லாஜிக் பற்றிய அக்கறை இல்லாமலும், பழைய தோற்றத்துடனும் உருவாக்கப்பட்டுள்ளன.
உயர் தொழில்நுட்பத்தை நம்பி கூலிக் கொலைகள் செய்யும் ஆர்யாவுக்கான கதாபாத்திரம் கச்சிதமாகஎழுதப்பட்டுள்ளது. அதில் ஆர்யாவும் மிகையின்றி அளவாக நடித்து அசத்துகிறார். மனைவி மம்தாமோகன்தாஸுக்காக உருகுவதிலும், அவரை கவனமாகப் பாதுகாப்பதிலும் ஆர்யா காட்டும் அக்கறை,முன்கதை, பின்கதை என இரண்டிலுமே அட்டகாசமாக எடுபடுகிறது. வலியச் சென்று சிங்கப்பூர் போலீஸிடம் சிக்கி, தன்னைப் பற்றிய தடமறிந்த எதிரி யார் என்று பார்க்கும் காட்சியில், ஆர்யாவின் நடிப்பில் ‘வயலன்ட்’ இல்லாத ‘சைலன்ட்’ ஸ்டைல்!
ஆனால், வெளிநாட்டில் வாழும் தமிழர் மீதான அக்கறை, சிங்கப்பூர் போலீஸுக்கே உதவுவது, துளியளவு அழகுணர்ச்சியும் இல்லாதகாதல் என்று விஷாலுக்காக உருவாக்கப்பட்ட ஹீரோயிசம் முழுவதும் ஒட்டவைக்கப்பட்டிருப்பதால் பல்லிளிக்கிறது.
12 வயது சிறுவர்களாக ஆர்யாவும், விஷாலும் பயிற்சி பெறும் காட்சிகள் முதல் 15 நிமிடத்தை விறுவிறுப்பாக்கி நிமிர்ந்து உட்கார வைக்கின்றன. பிறகு சிங்கப்பூரில் தமிழக தொழிலாளர்களுக்கு சூப்பர்மேன் பாணியில் விஷால்உதவும் காட்சி நிமிர்ந்து உட்கார வைக்கிறது. இப்படித்தான் அடுத்தடுத்த காட்சிகள் இருக்குமோ என்று எதிர்பார்த்தால், ஆர்யா - விஷால் ஆடுபுலி ஆட்டம், எதிர்பார்த்த திசையிலேயே பயணித்து சுவாரஸ்யம் இன்றி நமுத்துப் போய்விடுகிறது.
ஆக்ஷன் காட்சிகள் உயர்தொழில்நுட்பங்களின் பின்னணியில் இருந்தாலும் நம்பகத்தன்மை இல்லை. மிருணாளினி ரவியை கதாநாயகி என்று சொல்லமுடியாதபடி துணை நடிகைபோல பயன்படுத்தியுள்ளனர். பிரகாஷ் ராஜ், தம்பி ராமய்யா, மம்தா மோகன்தாஸ் ஆகிய மூவரும் தேவையானதை கொடுத்திருக்கின்றனர்.
ஆக்ஷன் களத்துக்கு அகண்டகோணங்களை அதிகம் நம்பியிருக்கும் ஆர்.டி.ராஜசேகரின் பிரம்மாண்ட ஒளிப்பதிவும், சாம் சி.எஸ். பின்னணி இசையும் படத்தை ரசிக்க வைக்கின்றன.
இரு முன்னணி கதாநாயகர்கள், சுவாரஸ்ய கதைக் களம், விரைந்தோடும் திரைக்கதை உதவ.. நம்பகத்தன்மை இல்லாத சில காட்சிகள் பின்னுக்கு இழுக்க.. சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஜெயித்திருக்கிறான் எனிமி.