தமிழ் சினிமா

இப்படி நடந்திருக்கவே கூடாது: புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் சூர்யா கண்ணீர்

செய்திப்பிரிவு

புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும்போது, துக்கம் தாளாமல் சூர்யா கண்ணீர் சிந்தினார்.

கன்னடத் திரையுலகின் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்தவர் புனித் ராஜ்குமார். அக்டோபர் 29-ம் தேதி உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு, சிகிச்சைப் பலனின்றி காலமானார். அவருக்கு வயது 46. புனித் ராஜ்குமாரின் மறைவு இந்தியத் திரையுலக பிரபலங்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

புனித் ராஜ்குமார் இறந்த சமயத்தில் பல்வேறு பணிகள் இருந்ததால் சூர்யாவால் நேரில் செல்ல இயலவில்லை. இன்று (நவம்பர் 5) காலை புனித் ராஜ்குமார் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நேரில் அஞ்சலி செலுத்தினார் சூர்யா. அங்கிருந்த புனித் ராஜ்குமாரின் படத்துக்கு மாலை அணிவித்துவிட்டு, துக்கம் தாளாமல் அழுதார். சில நிமிடங்கள் அழுதவர் பின்பு அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தினார். சூர்யாவுடன் சிவராஜ்குமாரும் இருந்தார்.

புனித் ராஜ்குமாருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பத்திரிகையாளர்கள் மத்தியில் சூர்யா பேசியதாவது:

"நடந்ததில் நியாயமே இல்லை. இப்படி நடந்திருக்கவே கூடாது. இன்னும் ஒப்புக்கொள்ள, ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எங்கள் இருவரின் குடும்பத்தினரும் நெருக்கமான நண்பர்களாக இருந்தோம். ஒருவர் மீது ஒருவர் அதிக அன்பு கொண்டிருந்தோம். இவர்கள் குடும்பத்தோடு அப்பாவுக்கு மறக்க முடியாத பல தருணங்கள் உள்ளன.

என் அம்மாவின் வயிற்றில் நான் 4 மாதக் குழந்தையாக இருந்தபோது புனித் அவரது அம்மா வயிற்றில் 7 மாதக் குழந்தையாக இருந்தார் என்று எனக்கு என் அம்மா சொன்னது இன்றும் நினைவில் இருக்கிறது. புனித்துக்கு இப்படி நடந்ததை என் குடும்பத்தில் ஒருவராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. புகைப்படத்தை, எந்த வீடியோவைப் பார்த்தாலும் சிரித்துக் கொண்டேதான் இருப்பார்.

சமூகத்துக்கு, அவர் விரும்பிய மக்களுக்கு அவர் செய்த பல அற்புதமான காரியங்கள் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் பற்றிய நினைவுகளைப் பிடித்துக் கொண்டு நம் மனதில் என்றுமே அவர் புன்னகைத்துக் கொண்டிருப்பதை நாம் உறுதி செய்வோம். அவரது குடும்பம், மகள்கள், அண்ணன், நலம் விரும்பிகள், கன்னட மக்கள், அவருக்கு அன்பு கொடுத்த அத்தனை பேருக்கும் ஆறுதலையும், இதைத் தாங்கும் மன உறுதியும் தரவேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்.

அவரது இழப்பைக் கண்டிப்பாக உணர்வோம். அவர் குடும்பத்துக்கு என் அனுதாபங்கள்".

இவ்வாறு சூர்யா பேசினார்.

SCROLL FOR NEXT