திரு இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருக்கும் 'கருடா' படத்தின் படப்பிடிப்பை ஏப்ரல் 1ம் தேதி முதல் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'இருமுகன்'. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் இப்படத்தை ஷிபு தமீன்ஸ் தயாரித்து வருகிறார்.
'இருமுகன்' படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் மார்ச் 20 முதல் தொடங்குகிறது. 8 பிரம்மாண்ட அரங்குகளில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. அதனைத் தொடர்ந்து காஷ்மீர், பாங்காக் ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது.
'இருமுகன்' படத்தைத் தொடர்ந்து ஏப்ரல் 1ம் தேதி முதல் 'கருடா' படத்துக்கு தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் விக்ரம். திரு இயக்கவிருக்கும் இப்படத்தின் நாயகியாக காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
வில்லனாக மகேஷ் மஞ்சரேகர் நடிக்கவிருக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் நாசர், கருணாஸ் நடிக்கிறார்கள். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இப்படத்துக்கு கிரிநந்த் இசையமைக்க இருக்கிறார். சில்வர்லைன் பிலிம் பேக்டரி நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இருக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 1 ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. ஸ்ரீபெரும்புதூர் அருகே 100 ஏக்கர் நிலத்தை வாடகைக்கு எடுத்து அதில் பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
சென்னையை அடுத்து பொள்ளாச்சி, கோவை, அகமதாபாத், லக்னோ, ஆகிய இடங்களிலும், பெரும்பகுதி படப்பிடிப்பு அரபு நாடுகளிலும் நடைபெற உள்ளது.