விவசாயி பாலனின் டிராக்டர் தவணையை செலுத்த தயாராக இருப்பதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
விவசாயி பாலனை டிராக்டரில் இருந்து இறக்கி போலீஸார் தாக்கிய வீடியோ பதிவு சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது. இதனை பலரும் கண்டித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.மேலும், விஜய் மல்லையை மையப்படுத்தியும் இதில் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், விவசாயி பாலனின் கடனை அடைக்க தயாராக இருப்பதாக ட்விட்டர் பக்கத்தில் விஷால் தெரிவித்து இருக்கிறார். விஷாலின் இந்த கருத்துக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.
இது குறித்து விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், "பாலன் உங்களை எனக்கு தெரியாது. ஆனால் நீங்கள் ஒரு விவசாயி என்ற அடிப்படையில் உங்களுக்கு உறுதுணைபுரிய விரும்புகிறேன். எனக்கு உங்களுடைய கடன் தவணைத் தொகை எவ்வளவு என்று தெரியாது. ஆனால், என்னுடைய உறுதுணையை ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று தெரிவித்திருக்கிறார்.
விவசாயி பாலனுக்கு உதவியது குறித்து விஷாலிடம் கேட்ட போது "சம்பந்தப்பட்ட நபர்களை அனுப்பி உடனடியாக அவருடைய தவணைத் தொகையை முழுவதும் அடைக்கச் சொல்லியிருக்கிறேன்.
அந்த வீடியோவைப் பார்த்தவுடனே எனக்கு அவருடைய கடனை அடைக்க வேண்டும் என்று தோன்றியது. கண்டிப்பாக அவருக்கு ஏதோ ஒரு சூழலால் தான் அப்பணத்தை அடைக்க முடியாமல் போயிருக்கும்.
தமிழ்நாட்டின் வேர் விவசாயிகள் தான். நமக்கு அம்மா, அப்பா சோறு போடுகிறார்கள், அந்த சோறு விவசாயிடம் இருந்து தான் வருகிறது.
விவசாயிகளை கண்டிப்பாக காப்பாற்றுவேன். எனக்கு பாலன் என்றால் யாரென்றே தெரியாது, அவரிடம் பேசிவிட்டேன். அந்த வீடியோவைப் பார்த்தவுடன் எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அனைவருமே கடன் வாங்குகிறோம். விவசாயிக்கு இந்த மாதிரியான சூழல் வரவே கூடாது. இன்று இரவுக்குள் அவருடைய கடன் அடைக்கப்பட்டு நிம்மதியாக இருப்பார்" என்று தெரிவித்தார்.
விவசாயி பாலனின் கடன் தவணை விவரம்:
தஞ்சை மாவட்டம் பாப்பாநாடு அருகே உள்ள சோழகன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பாலன்(50). கடந்த 2011-ல் தஞ்சையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.3.80 லட்சம் கடன் பெற்று, டிராக்டர் வாங்கியுள்ளார். இந்தக் கடனுக்காக தலா ரூ.64 ஆயிரம் வீதம் 6 தவணைகளைச் செலுத்தியுள்ளார்.
இந்நிலையில், கடைசி 2 தவணைகள் நிலுவை இருந்ததாகவும், நெல் அறுவடை முடிந்த பின்னர் தவணைத் தொகையைச் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், நிதி நிறுவன ஊழியர்கள், ரூ.32 ஆயிரத்தை முதலில் செலுத்துங்கள் என்று கூறி, அந்த தொகையைப் பெற்றுள் ளனர். சில நாட்கள் கழித்து அவரது டிராக்டரை ஜப்தி செய்யப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.
கடந்த 4-ம் தேதி அறுவடையில் பாலன் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த பாப்பாநாடு காவல் நிலைய ஆய்வாளர் குமாரசாமி மற்றும் நிதி நிறுவன ஊழியர்கள், டிராக்டரில் இருந்து பாலனை கீழே தள்ளி, சரமாரியாக அடித்துள்ளனர். பின்னர் அவரைக் காவல் நிலையத்துக்கு இழுத்துச் சென்றதுடன், டிராக்டரையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யாமல் இருக்கவும், அவரை விடுவிக்கவும் அவரது உறவினர்களிடம் போலீஸார் பணத்தைப் பெற்றுக்கொண்டு, அவரை விடுவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.