தமிழ் சினிமா

இளையராஜாவுக்கு பால்கே விருது: வைரமுத்து வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

இளையராஜாவுக்கு பால்கே விருது வழங்க வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

67-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இதனை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வழங்கினார். இதனைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

ரஜினியின் நெருங்கிய நண்பரான கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து, அவருக்கு வாழ்த்து கூறும் விதமாக தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது:

"பால்கே விருது பெற்றதில் கலை உலகுக்கே பெருமை சேர்த்துள்ளார் நண்பர் ரஜினிகாந்த். ஊர்கூடி வாழ்த்துவோம். கமல்ஹாசன் - பாரதிராஜா - இளையராஜா என்று பால்கே விருதுக்குத் தகுதிமிக்க பெருங்கலைஞர்கள் தமிழ்நாட்டில் மேலும் திகழ்கிறார்கள் என்பதையும் மத்திய அரசின் கண்களுக்குக் காட்டுவோம்".

இவ்வாறு வைரமுத்து தெரிவித்துள்ளார்.

இளையராஜா - வைரமுத்து இருவருக்குமே பிரச்சினை ஏற்பட்டு, இருவரும் இணைந்து பணிபுரிந்து நீண்ட வருடங்கள் ஆகின்றன. இருவரும் இப்போதுவரை பேசிக் கொள்வதுமில்லை. தற்போது இளையராஜாவுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்க வேண்டும் என்று வைரமுத்து கூறியிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

SCROLL FOR NEXT