சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள 'கொம்பு வச்ச சிங்கம்டா' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார், மடோனா செபஸ்டின், சூரி, மறைந்த இயக்குநர் மகேந்திரன், ஹரிஷ் பெரடி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கொம்பு வச்ச சிங்கம்டா'. இந்தர் குமார் தயாரித்துள்ள இந்தப் படம் அனைத்து பணிகளும் முடிவடைந்து, வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.
பல்வேறு படங்களில் சசிகுமார் கவனம் செலுத்தி வந்தாலும், கரோனா அச்சுறுத்தலுக்கு முன்பே தயாராக இருந்த படம் 'கொம்பு வச்ச சிங்கம்டா' என்பது குறிப்பிடத்தக்கது. ஓடிடி வெளியீடு அல்லாமல் திரையரங்க வெளியீட்டுக்காகக் காத்திருந்தது படக்குழு.
தற்போது கரோனா அச்சுறுத்தல் குறைந்து திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு படங்கள் வெளியாகி வருவதால், சரியான வெளியீட்டுத் தேதிக்காகக் காத்திருந்தது.
இறுதியாக, நவம்பர் 26-ம் தேதி 'கொம்பு வச்ச சிங்கம்டா' வெளியாகும் என அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளைத் துரிதப்படுத்த உள்ளது படக்குழு.