கரோனா நிகழ்வுகள் தன்னை எந்தவிதத்தில் பாதித்தன என்ற கேள்விக்கு ஜோதிகா பதில் அளித்துள்ளார்.
இரா.சரவணன் இயக்கத்தில் ஜோதிகா, சசிகுமார், சமுத்திரக்கனி, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'உடன்பிறப்பே'. இது ஜோதிகா நடிப்பில் வெளியாகும் 50-வது படமாகும். அமேசான் ஓடிடி தளத்தில் நாளை (அக்டோபர் 14) வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தை விளம்பரப்படுத்த ஜோதிகா இணையம் வழியே பேட்டிகள் அளித்துள்ளார். அதில் "ஒரு மனிதராகவும், ஒரு படைப்பாளியாகவும் இந்த கரோனா காலகட்டத்தின் நிகழ்வுகள் உங்களை எந்தவிதத்தில் பாதித்தன” என்ற கேள்வி ஜோதிகாவிடம் எழுப்பப்பட்டது.
அதற்கு ஜோதிகா அளித்த பதில்:
"கடந்த 2 ஆண்டுகளாகப் படப்பிடிப்புக்குப் போகவில்லை. முதல் ஆறு மாத இடைவெளிக்குப் பிறகு, சூர்யா படப்பிடிப்புத் தளங்களுக்குச் சென்றார். ஆனால் எங்களில் ஒருவர் குழந்தைகளை பராமரித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக நான் வீட்டில் குழந்தைகளோடு இருக்கத் தீர்மானித்தேன். அது ஒரு நீண்ட இடைவெளி, ஆனால் உண்மையில் நான் அதை மிகவும் ரசித்தேன்.
நானும் சூர்யாவும், தனித்தனியாகவும் சேர்ந்தும், எங்களை மீண்டும் உணர்ந்து எங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொண்டோம். நான் பேக்கிங் செய்யவும், வரையவும் கற்றுக் கொண்டேன். எங்களுடைய சொந்த ஊர்களில் இருக்கும் வீடுகளுக்குப் பயணம் செய்து, சில அற்புதமான நினைவுகளை உருவாக்கிறோம். அவைதான் இந்த கரோனா காலகட்டத்தில் நான் எடுத்துக் கொண்ட மிகப்பெரிய விஷயங்கள்"
இவ்வாறு ஜோதிகா தெரிவித்துள்ளார்.