தமிழ் சினிமா

டெம்பர் ரீமேக்: ஜூனியர் என்.டி.ஆர் வேடத்தில் விஷால்

ஸ்கிரீனன்

தெலுங்கில் வரவேற்பைப் பெற்ற படமான 'டெம்பர்' ரீமேக்கில் நாயகனாக நடிக்க விஷால் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், காஜல் அகர்வால், பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி பெரும் வசூல் சாதனை புரிந்த படம் 'டெம்பர்'. இதனால் இப்படத்தின் தமிழ் ரீமேக்கிற்கு கடும் போட்டி நிலவி வந்தது. ஊழல் நிறைந்த இரக்கமற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் எப்படி ஒரு சம்பவத்தால் மாறுகிறார் என்பதே 'டெம்பர்' படத்தின் கதைக்களம்.

'இது நம்ம ஆளு' படத்தைத் தொடர்ந்து ஆதிக் ரவிசந்திரன் மற்றும் விஜய் சந்தர் ஆகியோரது இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் சிம்பு. இதில் விஜய் சந்தர் இயக்கவிருக்கும் படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரிக்க இருக்கிறார். இப்படம் 'டெம்பர்' படத்தின் ரீமேக் என்றும், காஜல் அகர்வால் சிம்புவுக்கு நாயகியாக நடிக்க இருக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், ஜூனியர் என்.டி.ஆர் வேடத்தில் விஷால் நடிக்கவிருக்கிறது தற்போது உறுதியாகி இருக்கிறது. இது குறித்து "'டெம்பர்' படத்தின் ரீமேக்கில் சிம்பு நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

ஆனால், விஷால் நடிக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது. மிஷ்கினின் 'துப்பறிவாளன்' படத்தைத் தொடர்ந்து இப்படத்தில் நடிக்கவிருக்கிறார் விஷால்" என்று படக்குழு சார்பில் தெரிவித்தார்கள்.

விஷாலுக்கு 'டெம்பர்' படம் மிகவும் பிடித்திருந்ததாகவும், ஜூனியர் என்.டி.ஆர் பாத்திரம் கண்டிப்பாக தன்னால் சிறப்பாக செய்ய முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தாகவும் குறிப்பிட்டார்கள். தயாரிப்பாளர் தாகூர் மது இப்படத்தை தயாரிக்கவிருக்கிறார்.

இப்படத்தை சண்டைப் பயிற்சி இயக்குநர் அனல் அரசு இயக்கவிருக்கிறார், காஜல் அகர்வால் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

SCROLL FOR NEXT