தமிழ் சினிமா

நிறைய பேர் என்னை நடிக்க வேண்டாம் என்று சொன்னார்கள்: சாண்டி

செய்திப்பிரிவு

நான் நடிக்கிறேன் எனச் சொன்னபோது, நிறைய பேர் வேண்டாம் எனச் சொன்னார்கள் என்று நடன இயக்குநர் சாண்டி தெரிவித்தார்.

ஜீவிதா கிஷோர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் '3:33'. நம்பிக்கை சந்துரு இயக்கியுள்ள இந்தப் படத்தில் சாண்டி, கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமாகிறார் நடன இயக்குநர் சாண்டி. '3:33' படத்தின் ட்ரெய்லருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

திரையரங்குகளில் அக்டோபர் 21-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தை விளம்பரப்படுத்தப் பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு.

இந்தச் சந்திப்பில் சாண்டி பேசியதாவது:

" ’3:33’ நாயகனாக எனது முதல் படம் இது. பிக் பாஸிலிருந்து வெளியே வந்த பிறகு நிறைய கதைகளைக் கேட்டேன். ஏதாவது சீரியஸாக பண்ணலாமே என யோசித்துக் கொண்டிருந்தபோது, சந்துரு கதை சொல்கிறேன் என்றார். அவர் கதை சொல்லும்போது, அந்த இடத்தையே ரணகளமாக்கி, நடித்துக் கதை சொன்னார்.

இந்தக் கதைக்கு நான் தாங்குவேனா என நினைத்தேன். ஆனால், நான்தான் நடிக்க வேண்டும் என்றார் சந்துரு. இந்தப் படத்தின் உண்மையான நாயகன் சந்துருதான். இந்தப் படத்தில் சூப்பராக வேலை வாங்கினார். அவர் நடித்துக் காட்டியதில் 50 சதவீதம்தான் நான் செய்துள்ளேன். அவருக்குள் ஒரு நடிகரும் இருக்கிறார்.

நான் நடிக்கிறேன் எனச் சொன்னபோது, நிறைய பேர் வேண்டாம் என்றார்கள். நீங்கள் கோரியோகிராபி மட்டும் செய்யுங்கள் என்றார்கள். ஆனால், எனக்கு பிரபுதேவா மாஸ்டர், லாரன்ஸ் மாஸ்டர் போல் வர வேண்டும் என்பதுதான் ஆசை. படத்தை ஒரு வீட்டிற்குள்ளேயே வைத்து அருமையாக எடுத்துவிட்டார்கள்.

தயாரிப்பாளருக்கு இப்படம் பெரிய லாபத்தைச் சம்பாதித்துத் தரும். இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் மிக அற்புதமாக இசையமைத்துள்ளார்".

இவ்வாறு சாண்டி பேசினார்.

SCROLL FOR NEXT