தமிழ் சினிமா

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' 2-ம் பாகம் வருவது உறுதி: இயக்குநர் பொன்ராம்

செய்திப்பிரிவு

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' 2-ம் பாகம் வருவது உறுதி என்று இயக்குநர் பொன்ராம் தெரிவித்துள்ளார்.

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், சூரி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்'. 2013-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் இசையமைப்பாளராக இமான் பணிபுரிந்தார். அவருடைய பாடல்களும் படத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்தது.

சமீபத்தில் 'டாக்டர்' படம் தொடர்பாக சிவகார்த்திகேயன் பேட்டி அளித்தார். அதில் " 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் 2-வது பாகம் குறித்து சும்மா பேசினோம். ஆனால், அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கவே கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். அது ஒரு எபிக் படம். நாங்கள் எங்களையே அறியாமல் ஜாலியாக எடுத்த படம். அதைத் திரும்ப எடுக்கவே முடியாது" என்று தெரிவித்தார்.

தற்போது 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் இயக்குநர் பொன்ராம், கண்டிப்பாக 2-பாகம் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் பொன்ராம் கூறியிருப்பதாவது:

" 'வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2' வருவது உறுதி. சிவகார்த்திகேயன் சார் முதிர்ச்சி ஆகிவிட்டார். அடுத்து வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்களை வைத்து 'வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2' எடுப்போம். போட்றா வெடிய…"

இவ்வாறு இயக்குநர் பொன்ராம் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT