சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவாகியுள்ள 'விநோதய சித்தம்' திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
ஜீ 5 ஓடிடி தளம் பல்வேறு படங்களை நேரடியாக ஓடிடியில் வெளியிட்டு வருகிறது. மேலும், சில படங்களைத் தயாரித்து வெளியிட்டும் வருகிறது. தற்போது சமுத்திரக்கனி இயக்கி நடித்துள்ள 'விநோதய சித்தம்' திரைப்படம் அடுத்ததாக ஜீ 5 தளத்தில் வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தில் தம்பி இராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அபிராமி ராமநாதன் தயாரித்துள்ளார். இதில் முனீஸ்காந்த், சஞ்சிதா ஷெட்டி, ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக ஏகாம்பரம் பணிபுரிந்துள்ளார்.
'விநோதய சித்தம்' தொடர்பாக சமுத்திரக்கனி, "மனித மனம் வேடிக்கையான முறையில் நடந்து கொள்கிறது. நம்மால் அவற்றை கட்டுப்படுத்த முடியாது. இதுதான் இப்படத்தின் அடிப்படை கரு. அனைவராலும் இப்படத்தின் கதையை உணர்ந்துகொள்ள முடியும். இந்த கதை பார்வையாளர்களுடன் உரையாடும். இந்த படத்தைப் பார்வையாளர்களுக்குக் காண்பிப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி" என்று தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 13-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் 'விநோதய சித்தம்' வெளியாகவுள்ளது.