வம்சி இயக்கத்தில் கார்த்தி, நாகார்ஜூனா, தமன்னா, விவேக் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் 'தோழா'. கோபி சுந்தர் இசையமைத்திருக்கும் இப்படத்தை பி.வி.பி சினிமாஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. 'தோழா' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
பத்திரிகையாளர் சந்திப்பில் நாகார்ஜூனா பேசும்போது, "'இதயத்தை திருடாதே' படத்திற்கு முன்பு வேடிக்கையான விஷயங்களை செய்து கொண்டிருந்தேன். யாராவது லிப்ஸ்டிக் போடுங்கள், ஜீன்ஸ் அணியாதீர்கள் என்று சொல்லுவார்கள். அதை அப்படியே பின்பற்றினேன்.
ஆனால், இயக்குநர் மணிரத்னம் தான் என்னை மாற்றினார். தாடி வளர்க்கச் சொன்னார், ஜீன்ஸ் அணியச் சொன்னார், நைக் ஷு போடச் சொன்னார். அதை எல்லாம் அணிந்து நடித்ததால் அந்தக் காலத்தில் அதற்கு இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. இப்போதும் விமான நிலையத்தில் தமிழ் ரசிகர்கள் என்னைப் பார்த்தால் 'இதயத்தை திருடாதே' படத்தில் வரும் 'ஒடிப் போலாமா' வசனத்தைத் தான் நினைவுகூர்கிறார்கள்.
'ரட்சகன்' படத்தை ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்காகவே ஒப்புக் கொண்டேன். இப்போதும் அப்படத்தில் வரும் நரம்பு புடைக்கும் காட்சி இங்கு பிரபலம். தமிழ் மக்கள் என்னை நல்ல படங்களில் மட்டுமே காண விரும்புகிறார்கள். அதனால் தான் குறைந்த அளவு தமிழ் படங்களை பண்ணுகிறேன்.
நானும் அமலாவும் 'THE INTOUCHABLES' படத்தை பார்த்தோம். அப்போது என்னிடம் இது போன்று ஒரு கதையைக் கொண்டு வந்தால் உடனே ஒப்புக் கொள்வேன் என்று அமலாவிடம் தெரிவித்தேன். சில நாட்கள் கழித்து இயக்குநர் வம்சி என்னிடம் மிகவும் பயந்து பயந்து வந்து 'THE INTOUCHABLES' படத்தின் டிவிடியைக் கொடுத்தார். உடனே அவரிடம் அந்த வீல் சேரில் வரும் பாத்திரம் தானே என்றேன். ஏனென்றால் இப்படத்தில் அந்த பாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
ஆனால், என்னுடைய மனைவி, மகன்கள் நான் வீல்சேரில் வருவது போன்ற பாத்திரத்தில் நடிப்பதை விரும்பவில்லை. முழுப்படமாக அவர்கள் பார்த்தவுடன் என்னை கட்டிப்பிடித்து பாராட்டுவார்கள் என நம்புகிறேன். இப்படத்தில் என்னை கவனித்துக் கொள்ளும் பாத்திரத்தில் கார்த்தியை நடிக்க வைக்கலாமா என்று இயக்குநர் கேட்டபோது உடனே ஒ.கே என்று சொல்லிவிட்டேன்.
'பருத்திவீரன்' படத்தை பார்த்து பிரமித்து யார் இவர் என்று கேட்டேன். அப்போது தான் எனக்கு அவர் சூர்யாவின் தம்பி கார்த்தி என்று தெரியும். இப்படத்தில் நான் தமிழ் பேசி நடிப்பதற்கும், டப்பிங் பேசுவதற்கும் கார்த்தி எனக்கு நிறைய உதவி புரிந்திருக்கிறார்" என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது, "இதுவரை சுமார் 90 படங்கள் நடித்துவிட்டேன். ஒரே மாதிரியான படங்களில் நடிப்பது எனக்கு போரடித்துவிட்டது." என்று குறிப்பிட்டார்