'அஞ்சான்' படத்தின் விநியோக உரிமை, தமிழ்நாட்டை தவிர மற்ற அனைத்து ஏரியாக்களுமே அதிக விலைக்கு போனதால் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
'சிங்கம் 2' படத்தினைத் தொடர்ந்து தற்போது 'அஞ்சான்' படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இரட்டை வேடத்தில் சூர்யா நடிக்கும் இப்படத்தினை இயக்கி வருகிறார் இயக்குநர் லிங்குசாமி. யுவன் இசையமைக்கும் இப்படத்தினை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்க, யு.டிவி நிறுவனம் வெளியிடுகிறது.
சமந்தா, மனோஜ் பாஜ்பாய், வித்யூத் ஜம்வால், ராஜ்பால் யாதவ் உள்ளிட்ட பலர் சூர்யாவோடு நடித்து வருகின்றனர். மும்பையில் உள்ள அந்தேரி பகுதியில் நடைபெறுவது போல இப்படத்தின் கதையினை வடிவமைத்து இருக்கிறார் லிங்குசாமி.
படத்தின் டீஸர், டிரெய்லர், இசை உள்ளிட்ட எதுவுமே இன்னும் வெளியாகாத நிலையில் படத்தின் வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கி இருக்கிறது.
படத்தின் வெளிநாட்டு உரிமையை யாஹ்யா பாய், தெலுங்கு டப்பிங் உரிமையை ஸ்ரீதர் லகடபதி வாங்கியிருக்கிறார்கள். கேரள மற்றும் கர்நாடகா உரிமைகளும் விற்று விட்டன. தமிழ்நாட்டு உரிமைகள் அனைத்தையுமே படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டிற்குப் பிறகு வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டின் விநியோக உரிமைகளுக்கு கடும் போட்டி நிலவி வரும் நிலையில் இப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.