தமிழ் சினிமா

கடும் கிண்டலுக்கு ஆளான 'பேய் மாமா' போஸ்டர்: காரணம் என்ன?

செய்திப்பிரிவு

யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள 'பேய் மாமா' படத்தின் போஸ்டர் இணையத்தில் கடும் கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.

பாக்யா சினிமாஸ் பட நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'பேய் மாமா'. ஷக்தி சிதம்பரம் இயக்கியுள்ள இந்தப் படத்தின் நாயகனாக யோகி பாபு நடித்துள்ளார். இதில் ரேஷ்மா, ரமேஷ் கண்ணா, இமான் அண்ணாச்சி, வையாபுரி உள்ளிட்ட பலர் யோகி பாபுவுடன் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.

தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டுவிட்டதால், செப்டம்பர் 24-ம் தேதி வெளியாகவுள்ளது 'பேய் மாமா'. இதற்குத் தணிக்கை அதிகாரிகள் 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளனர். இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்புக்கு வெளியிடப்பட்ட போஸ்டர் இணையத்தில் கடுமையான கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.

ஏனென்றால், இந்தியில் விக்கி கெளசல் நடிப்பில் வெளியான படம் 'பூட்'. இந்தப் படத்துக்காக உருவாக்கப்பட்ட போஸ்டரை அப்படியே மாற்றி, 'பேய் மாமா' போஸ்டரை உருவாக்கியுள்ளனர். குறிப்பாகப் புதிதாக யோகி பாபு படத்தை வைக்காமல், இந்தி போஸ்டரில் உள்ள நாயகனின் தலைக்கு பதிலாக யோகி பாபுவின் தலையை வைத்து உருவாக்கியுள்ளனர்.

அந்த போஸ்டரில் உள்ள இடைவெளியில், 'பேய் மாமா' படத்தில் நடித்தவர்களின் புகைப்படங்களை இணைத்து வெளியிட்டுள்ளனர். 'பூட்' மற்றும் 'பேய் மாமா' ஆகிய இரண்டு போஸ்டர்களையும் பகிர்ந்து சமூக வலைதளத்தில் பலரும் கிண்டல் செய்து வருகிறார்கள். ஆனால், இதுகுறித்துப் படக்குழுவினர் சார்பில் எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை.

SCROLL FOR NEXT