தமிழ் சினிமா

திரை விமர்சனம்: கோடியில் ஒருவன்

செய்திப்பிரிவு

ஊராட்சிமன்ற அரசியலில் வஞ்சிக்கப்பட்டு, முடங்கிப்போனவர் விஜயராகவனின் (விஜய் ஆன்டனி) தாய். ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற தன்தாயின் கனவை நிறைவேற்ற சென்னைக்கு வந்து, விளிம்புநிலை மக்கள்வசிக்கும் பகுதியில் குடியேறுகிறார் விஜயராகவன். அங்கு, சமூகவிரோத கும்பலின் பகடைக்காய்களாக மாறும் மாணவர்களுக்கு டியூஷன் நடத்தி, அவர்களை முன்னேற்றுகிறார். இதை பொறுத்துக்கொள்ள முடியாத அப்பகுதி கவுன்சிலரின் அடியாட்கள் விஜய் ஆன்டனியை புரட்டியெடுக்கின்றனர். பொறுமை காக்கும் அவர், ஐஏஎஸ்தேர்வில் வென்று இறுதி நேர்காணலில் பங்கேற்க டெல்லி செல்லும் நேரத்தில் வில்லன் ஆட்களுடன் பிரச்சினை முற்றுகிறது. ஆட்சிப்பணியில் அமர்ந்து மக்களுக்கு சேவை செய்ய நினைத்த விஜயராகவன், அரசியல் அதிகாரத்தைப் பெற தன் ஆடுகளத்தை மாற்றுகிறார். அதில் அவர் அடைந்த உயரம் என்ன என்பதே திரைக்கதை.

போரடிக்காமல் முதல் பாதியை எதிர்பார்ப்புடன் நகர்த்திச் செல்கிறார் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன்.இரண்டாம் பாதியில் ஏகப்பட்ட லாஜிக் சிக்கல்கள். இருந்தும், நாயகன் தோற்பது மாதிரியான காட்சிகள் வைத்த விதம் பாராட்டுக்குரியது.

ஒரு கவுன்சிலரால் தன் பகுதியைஎப்படியெல்லாம் முன்னேற்ற முடியும், எவ்வளவு அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்க முடியும், அவசியமான பணிகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது, அதில் எத்தனை சதவீதம் கமிஷனாக ‘ஒதுக்கப்பட்டு’ விடுகிறது, அதை தடுக்க நினைக்கும் ஒருவனுக்கு எப்படியெல்லாம் இடையூறுகள் வரும் என்று காண்பித்த விதம் புதுமை. தமிழ் சினிமாவில் இதுவரைகாட்டப்படாத வகையில் மாநகராட்சி அரசியலின் இண்டு இடுக்குகளைத் தொட்டு விவரித்த துணிவுக்காகவே இயக்குநரைப் பாராட்டலாம்.

அரசியல், ஆக்‌ஷன் கலந்த களம்,விஜய் ஆன்டனியின் ‘ஸ்மார்ட் லுக்’தோற்றத்துக்கு முரணாக இருந்தாலும், அலட்டாத நடிப்பால் கவனிக்க வைத்துவிடுகிறார். ஆனால்,மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் அவர் கூறும் பாரதி கவிதையும், வீராவேச வசனங்களும் ‘யூ டூ ஆன்டனி’ என்று கேட்க வைக்கின்றன. விஜய் ஆன்டனி படங்களில் கதாநாயகிக்கு இருக்கும் முக்கியத்துவம் இதில் மிஸ்ஸிங். ஆத்மிகா அழகாக இருக்கிறார், சிரிக்கிறார். கிளைமாக்ஸில் வில்லன் தலையில் பூச்சாடியால் ஒரு போடு போடுகிறார்.

‘பூ’ ராமு, பிரபாகர், ராமச்சந்திர ராஜு, சூப்பர் சுப்பராயன், சூரஜ் பாப்ஸ் என படத்தில் 5 வில்லன்கள். அவர்களுக்கு திரைக்கதையில் போதிய முக்கியத்துவம் இருப்பதும், அவர்கள் அட்டகாசமாக நடித்திருப்பதும், ‘கோடியில் ஒருவன்’ என்று நாயகன் காலரை தூக்கிவிட்டுக்கொள்ள காரணமாக அமைந்துவிடுகின்றன.

நிவாஸ் கே.பிரசன்னா இசையில் ‘சில நாள் கருவில்’ பாடல், அம்மாபாடல்கள் பட்டியலில் இடம்பிடிக்கும். கதாபாத்திரங்களை தனித்தனியே பிரித்தறியும் வகையில்பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார் ஹரிஷ் அர்ஜுன். இயற்கை எழில் சூழ்ந்த தேனி, கம்பம் பகுதி, சென்னையின் எஸ்.எஸ்.தோட்டம் என இருவேறு நிலப்பரப்புகளின் வேறுபாட்டை ஒளிப்பதிவில் கொண்டுவரும் உதயகுமாரின் பங்களிப்பும் படத்துக்கு பலம்.

நல்லவர்களுக்கு நல்லதும், கெட்டவர்களுக்கு கெட்டதும் நடக்கும் என்று நம்புகிற ‘வாய்மையே ஒரு நாள் வெல்லும்’ என்ற ‘டெம்பிளேட்’ ரக படங்களைப் பார்த்துப் புல்லரித்துப்போகிற யாரையும் ‘கோடியில் ஒருவன்’ நிச்சயம் ஈர்ப்பான்.

SCROLL FOR NEXT