தமிழ் சினிமா

'பொன்னியின் செல்வன்' முதல் பாகம் படப்பிடிப்பு நிறைவு: நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் முழுமையான பட்டியல் வெளியீடு

செய்திப்பிரிவு

'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. மேலும், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரமும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'பொன்னியின் செல்வன்'. தமிழ்த் திரையுலகில் பலரும் எடுக்க முயன்ற இந்தப் படத்தைத் தற்போது வெற்றிகரமாகப் படமாக்கி முடித்துள்ளார் மணிரத்னம். இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

இரண்டாம் பாகத்துக்கு இன்னும் ஒருசில காட்சிகள் மட்டுமே எடுக்கவேண்டியுள்ளது. முதல் பாகத்தின் இறுதிக்கட்டப் பணிகளை முழுமையாக முடித்துவிட்டு, இரண்டாம் பாகத்தின் காட்சிகளில் கவனம் செலுத்தவுள்ளார் மணிரத்னம். ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ரஹ்மான் உள்ளிட்ட சில நடிகர்களின் இரண்டு பாகங்களுக்கான காட்சிகளும் முடிக்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.

இதுவரை இந்தப் படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், பாடலாசிரியர்கள் என யாரையும் அதிகாரபூர்வமாகப் படக்குழு அறிவிக்காமல் இருந்தது. தற்போது முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த அறிவிப்புடன் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது படக்குழு.

இதில் ஐஸ்வர்யா ராய் பச்சன், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா, பிரபு, சரத்குமார், ஜெயராம், பிரகாஷ்ராஜ், ஜெயசித்ரா, ரஹ்மான், விக்ரம் பிரபு, அஸ்வின், விஜய் யேசுதாஸ், லால், நாசர், கிஷோர், நிழல்கள் ரவி, ரியாஸ் கான், மோகன் ராம், அர்ஜுன் சிதம்பரம், வினோதினி, பாலாஜி சக்திவேல், பார்த்திபன் ஆகியோர் நடித்திருப்பதாகப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், தயாரிப்பு வடிவமைப்பாளராக தோட்டா தரணி, எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத், வசனகர்த்தவாக ஜெயமோகன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். கல்கியின் 'பொன்னியின் செல்வன்' கதைக்குத் திரைக்கதை ஆசிரியர்களாக மணிரத்னம், ஜெயமோகன், குமாரவேல் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

பாடல்களை இளங்கோ கிருஷ்ணன், கபிலன், சிவா ஆனந்த், கிருத்திகா நெல்சன் ஆகியோர் எழுதியுள்ளனர். சண்டைக் காட்சிகளை விக்கி கெளசல், திலீப் சுப்பராயன் மற்றும் கெச்சா கம்பாக்டி ஆகியோர் வடிவமைத்துள்ளனர். உடைகளுக்கு ஏகா லக்கானியும், மேக்கப் கலைஞராக விக்ரம் கைக்வாட்டும், அணிகலன்களுக்கு கிஷன்தாஸ் நிறுவனமும் பொறுப்பேற்றுள்ளனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்தியா முழுக்கப் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இறுதியாக பொள்ளாச்சியில் 'பொன்னியின் செல்வன்' முதல் பாகத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமான 'பொன்னியின் செல்வன்' முதல் பாகம் 2022-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT