2016 ஆண்டில் அதிக படங்கள் வெளியாகும் நாயகனாக கண்டிப்பாக விஜய் சேதுபதி இருப்பார் என்று இப்போதே உறுதியாகி இருக்கிறது.
2015ம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் 'ஆரஞ்சு மிட்டாய்' மற்றும் 'நானும் ரவுடிதான்' ஆகிய படங்கள் மட்டுமே வெளியாகின. இதில் 'நானும் ரவுடிதான்' படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.
2015ம் ஆண்டில் பல்வேறு படங்களில் விஜய் சேதுபதி நடித்து வந்தாலும், பல்வேறு காரணங்களால் அப்படங்கள் எல்லாம் 2016ல் தான் வெளியாக இருக்கின்றன.
இந்நிலையில், 2016ம் ஆண்டில், விஜய் சேதுபதி நாயகனாக நடித்த அதிக படங்கள் வெளியாவது உறுதி.
அவருடைய நடிப்பில் முதல் வெளியீடாக பிப்ரவரி 12ம் தேதி 'காதலும் கடந்து போகும்' வெளியாக இருக்கிறது.
அதனைத் தொடர்ந்து 'சேதுபதி', 'இறைவி', 'மெல்லிசை', 'இடம் பொருள் ஏவல்', 'றெக்க', 'ஆண்டவன் கட்டளை' மற்றும் தனுஷ் தயாரிக்கும் படம் ஆகியவை வெளியாக இருக்கிறது. இதில் 'மெல்லிசை' மற்றும் 'இடம் பொருள் ஏவல்' ஆகிய படங்கள் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
'ரஜினி முருகன்' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் விரைவில் 'இடம் பொருள் ஏவல்' படத்தை வெளியிடும் முனைப்பில் இருக்கிறது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம், 'றெக்க' மற்றும் 'ஆண்டவன் கட்டளை' ஆகிய படங்களின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை என்றாலும், இரண்டு படக்குழுவும் ஒரே கட்ட படப்பிடிப்பில் மொத்த படத்தையும் முடிக்க திட்டமிட்டு இருக்கின்றன .
தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் படத்துக்காக கதை கேட்கும் படலத்தை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள். இதனால், 2016ம் ஆண்டில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்து 8 படங்கள் வெளியாக இருக்கிறது.