திருட்டு விசிடியை தடுக்க போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என நடிகர் கருணாஸ் குறைகூறினார்.
விக்னேஷ், தேவிகா, சந்திரிகா நடித்திருக்கும் 'அவன் அவள்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தி.நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்றது. நடிகர் சங்க நிர்வாகிகளான விஷால், கார்த்தி, கருணாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அப்படத்தின் இசையை வெளியிட்டார்கள்.
இசை வெளியீட்டு விழாவினைத் தொடர்ந்து நடிகர் சங்க துணைத் தலைவர் கருணாஸ் பேசியது, "புதிய படங்களின் திருட்டு விசிடிகள் உடனுக்குடன் வெளிவருகின்றன. திருட்டு விசிடியைத் தடுக்க தமிழ்த் திரையுலகம் தவறிவிட்டது. வடபழனி போலீஸ் ஸ்டேஷன் அருகே இருக்கும் கடையிலேயே புதிய படங்களின் விசிடிகள் விற்கப்படுகின்றன. இது குறித்து பல புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
எந்தத் திரையரங்கில் விசிடி தயாரிக்கப்படுகிறது என்பதை புகாரில் தெரிவித்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்தில் திருட்டு விசிடி தொழில் அமோகமாக நடந்து, ஆண்டுக்கு 600 கோடி வரை வியாபாரம் நடைபெறுகிறது. இதைத் தடுக்க திரையுலக சங்கத்தினர் ஒன்று திரள வேண்டும். திருட்டு விசிடியை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.