தமிழ் சினிமா

வெற்றிமாறனை முந்த முயல்வேன்: இயக்குநர் பாரதிராஜா

மு.பவித்ரா, கோ.நந்தினி

இயக்குநர் வெற்றிமாறனை முந்துவதற்கு நான் முயற்சி செய்வேன் என்று இயக்குநர் பாரதிராஜா புகழாரம் சூட்டினார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தினேஷ், முருகதாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'விசாரணை'. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்த இப்படத்தை தனுஷ் தயாரித்திருந்தார். லைக்கா நிறுவனம் வெளியிட்டது.

இப்படத்தின் கருத்துரை - கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, பாமரன் உள்ளிட்ட பலரோடு இணைந்து இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட படக்குழுவினரும் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சிக்கு இயக்குநர் பாரதிராஜா தலைமை தாங்கினார்.

இவ்விழாவில் இயக்குநர் பாரதிராஜா பேசியது:

"பொதுவாக சினிமா என்பது இலக்கியவாதிகளுக்கு தூர இருந்து ஏதோ ஒரு காரணத்தால் அவன் சினிமாக்காரன் என்கிற நிலைமாறி நாங்களும் உள்ளே வந்து உழுகிறோம் என்று உழ ஆரம்பித்திருக்கும் எழுத்தாளர்கள் அத்தனை பேரும் நன்றி கூறுகிறேன்.

தற்போது சினிமா ஒரு ஆரோக்கியமான சூழலில் இருக்கிறது. இந்த சினிமாவை ஒரு தீக்குச்சிக்கு இரையாக்குவோம் என்று ஒரு பெரிய எழுத்தாளர் எழுதினார். அவரைக் கூட்டுக் கொண்டு சினிமாவுக்கு வந்தார்கள் தீப்பெட்டியை மறந்துவிட்டார்கள்.

சினிமா என்பது எழுத்துலகம், பத்திரிகை உலகம் காட்டிலும் வலிமையானது. பத்திரிகையை மேய்ச்சல் அரிப்புள்ளவன் மட்டுமே படிப்பான்.. ஆனால் மேயத் தெரியாதவனுக்கும் மேயவிட்டுப் பார்ப்பது சினிமா.

வாழ்த்துவதற்கு வயதில்லை என்பார்கள், ஆனால் நான் வெற்றிமாறனை வாழ்த்த முடியாது. ஏனென்றால் 'விசாரணை' படத்தைக் காட்டிலும் ஒரு சிறந்த படத்தை எடுத்துவிட்டு வந்தால் வாழ்த்துகிறேன். இதை நான் சொல்வதற்கு வெட்கபடவில்லை. அப்படம் என்னை மிகவும் பாதித்துவிட்டது. அப்படத்தைப் பற்றி அலசி ஆராய்ந்து பேசுவதற்கு நான் வரவில்லை.

எப்போதுமே எனக்கு வன்முறையில் உடன்பாடு கிடையாது. அருவாள் கலாச்சாரத்தில் பிறந்தவன் என்றாலும் அருவாளைப் பார்த்தல் பயப்படுவேன். ஆனால் படத்தில் காட்டிவிட்டேன். என்னுடைய படங்களில் வன்முறை உணர்வு இருக்கும், ஆனால் காட்ட மாட்டேன். 'விசாரணை' படம் பார்த்த போது கீழே குனிந்து கொண்டேன். ஏனென்றால் அந்த அடிகளை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

எனக்கு பெரும்பாலாலும் நீதிபதிகளையும், வழக்கறிஞர்களையும் சரியாக தெரியாது. இப்படத்தில் நடித்திருந்த அனைவருமே அவர்களுடைய பணியை சிறப்பாக செய்திருந்தார்கள். நான் ஒரு நடிகனாக நாற்பைந்து வருஷமாக இருந்து நான் ஒரு நடிகனாக உணர்ந்தேன். இப்படத்தில் யாருமே நடிக்கவில்லை, இயல்பு மாறவில்லை, சமுத்திரக்கனியா என்று என்னால் நம்பவே முடியவில்லை. இவர்கள் எல்லாம் நடித்தார்களா, வாழ்ந்தார்களா?. இப்படத்தில் உண்மையில் அனைத்து காவல் அதிகாரிகளும் ரொம்ப தத்ரூபமாக நடித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

தற்போது இருக்கும் அனைத்து இளம் இயக்குநர்களையும் பணிகளை நான் மிகவும் நேசிக்கிறேன். அனைவருமே ஒரு வித்தியாசமான ஆயுதங்களோடு வந்திருக்கிறார்கள். அதற்காக நாங்கள் எல்லாம் பழைய ஆயுதங்கள் என்று நினைத்துவிட வேண்டாம். நாங்களும் புதிய ஆயுதங்களைத் தேடிக் கொண்டிருக்கிறோம், நாங்களும் வருவோம்.

ஒரு நல்ல படத்தைப் பார்க்கும் போது, "சே. என்ன ஒரு படம்" என்று சொல்லத் தோணுகிறது. அப்படித் தோன்றினால் அவன் ஒரு நல்ல கலைஞன். இந்த வெற்றிமாறனை எப்படி வெற்றிக் கொள்வது? உன்னை முந்துவதற்கு முயற்சி செய்வேன்." என்று பேசினார் இயக்குநர் பாரதிராஜா.

இயக்குநர் பாரதிராஜா தன் பேச்சுக்கு இடையே தன்னுடைய இளமை பருவத்து 'விசாரணை' அனுபவத்தை குறிப்பிட்டு பேசினார். அப்பேச்சின் முழுமையான வடிவம் வீடியோ வடிவில்:

</p>

SCROLL FOR NEXT