‘கெத்து’ திரைப்படத்துக்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளிவந்துள்ள ‘கெத்து’ திரைப் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு கேளிக்கை வரிவிலக்கு கோரி தமிழக அரசிடம், இந்த நிறுவனம் விண்ணப்பித்தது. ஆனால் ‘கெத்து’ என்ற சொல் தமிழ் வார்த்தை இல்லை என்று கூறி இப்படத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்படவில்லை.
இதை எதிர்த்து ரெட் ஜெயண்ட் நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி எம்.துரைசாமி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்ப தாவது:
மனுதாரர் கேளிக்கை வரி விலக்கு கோரி தமிழக அரசிடம் கடந்த 11-ம் தேதி விண்ணப்பித்த போது, ‘கெத்து’ என்று தமிழிலும், ‘GETHU’ என்று ஆங்கிலத்திலும் குறிப்பிட்டுள்ளார். இந்த படத் துக்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழிலும், ‘GETHU’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், ‘KETHU’ என்று ஆங்கிலத்தில் எழுதினால்தான் அதை ‘கெத்து’ என்ற தமிழ் வார்த்தையாக கருதமுடியும். மனுதாரர் ‘GETHU’ என்று குறிப்பிட்டதை கருத்தில் கொண் டால், அதை தமிழ் வார்த்தையாக கருத முடியாது என்று தமிழக அரசு பதில் மனுவில் தெரிவித் துள்ளது. ஆனால், ‘தமிழ்’ என்ற வார்த்தையை ஆங்கிலத்தில், ‘TAMIL.’ என்றுதான் எழுதுகிறோம். ‘THAMIL’ என்று எழுதுவதில்லை. இந்த வழக்கில் தமிழக அரசு கூறுவதை ஏற்றுக் கொண்டால், ‘TAMIL’ என்ற வார்த்தை தமிழ் இல்லை என்று கூறவேண்டிய நிலை ஏற்பட்டு விடும்.
‘கெத்து’ என்பது தமிழ் வார்த்தை இல்லை என்று படத்தை பார்த்த 6 பேர் கொண்ட குழு எந்த ஆதாரமும் இல்லாமல் அறிக்கையை கொடுத்துள்ளது. அதேபோல, தமிழ்நாடு வணிக வரித்துறைக்கு, தமிழ் வளர்ச் சித்துறை அனுப்பியுள்ள கடிதத் தில், ‘கெத்து’ என்பது தமிழ்ச் சொல் அல்ல என்று தெரி வித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அகராதியில் ‘கெத்து’ என்ற வார்த்தை இருப்பதைக்கூட பார்க்காமல், இப்படி ஒரு முடிவுக்கு தமிழ் வளர்ச்சித்துறை அதிகாரிகள் வந்திருப்பதை ஏற்க முடியாது. அகராதியில் இந்த வார்த்தை இடம் பெற்று, அதற்கு அர்த்தமும் கூறப்பட்டுள்ளதால், ‘கெத்து’ என்பது தமிழ் சொல்தான்.
எனவே, ‘ கெத்து’ திரைப்படம் கேளிக்கை வரிவிலக்கு கோர தகுதியான படம்தான். அப் படத்துக்கு வரிவிலக்கு தர மறுத்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்யப்படுகிறது. இப்படம் வெளியான நாள்முதல் (ஜனவரி 14-ம் தேதி) படம் பார்க்க வந்தவர்களிடம் வசூலிக்கப்பட்ட கேளிக்கை வரிக்கான தொகையை மனுதாரரிடம் வழங்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தர விட்டுள்ளார்.