2011ஆம் ஆண்டு வெளியான ‘ப்ளைண்ட்’ கொரியப் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக வெளியாகியுள்ள படம் ‘நெற்றிக்கண்’.
சிபிஐ அதிகாரி துர்கா (நயன்தாரா). எதிர்பாராமல் ஏற்படும் ஒரு கார் விபத்தில் தன் சொந்த தம்பியையும், கண்களையும் இழக்கிறார். இன்னொரு பக்கம் இளம்பெண்களை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லும் சைக்கோ கொலைகாரன் (அஜ்மல்).
பார்வையற்ற் வாழ்வுக்கு மெல்ல மெல்ல பழகிக் கொண்டிருக்கும் துர்கா ஒரு நாள் டாக்ஸி புக் செய்து விட்டுக் காத்திருக்கும் தருணத்தில் அந்த கொலைகாரனின் கண்ணில் படுகிறார். டாக்ஸி டிரைவர் என்று நினைத்து கொலைகாரனின் காரில் ஏறிச் செல்லும் துர்கா அவனது பிடியிலிருந்து தப்பிக்கிறார். இதன் பிறகு அந்த கொலைகாரன் துர்காவை மீண்டும் கடத்த முயற்சி செய்கிறான். அவனிடமிருந்து துர்கா தப்பித்தாரா என்ற கேள்விக்கான விடையே ‘நெற்றிக்கண்’.
கண்பார்வையிழந்த துர்காவாக நயன்தாரா. ’லேடி சூப்பர்ஸ்டார்’ என்ற அடைமொழியுடன் ஒரு மாஸ் ஹீரோவுக்கு உண்டான பில்டப்புடன் அறிமுகமாகிறார். ஆரம்ப காட்சிகளில் நடிப்பில் லேசான செயற்கைத்தனம் எட்டிப் பார்த்தாலும் பார்வையிழந்த பிறகு மெல்ல அதற்கு பழகுவது, வளர்ப்பு நாய் இறந்தது தெரிந்தது உடைந்து அழுவது என ஆங்காங்கே தனது முத்திரையை பதிக்கவும் செய்திருக்கிறார். நயன்தாராவுக்கு உதவும் போலீஸ் அதிகாரியாக மணிகண்டன் (படத்திலும் அதே பெயரிலேயே வருகிறார்). படம் முழுக்க நயன்தாராவுடன் பயணிக்கும் கதாபாத்திரம். தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சைக்கோ கொலைகாரனாக அஜ்மல். தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை கச்சிதமாக கையாண்டு சிறப்பான கம்பேக் கொடுத்திருக்கிறார்.
ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு மற்றும் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் பின்னணி இசை படத்துக்கு பக்கபலம். நயன்தாராவுக்கு உதவும் டெலிவரி பாயான கவுத்மை அஜ்மல் துரத்தும் காட்சிகள், மெட்ரோ நிலைய காட்சி உள்ளிட்ட படத்தில் இருக்கும் சில பரபரப்பான காட்சிகளில் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறது கேமராவும் இசையும்.
படத்தின் ட்ரெய்லரிலேயே கிட்டத்தட்ட முழுக் கதையையும் சொல்லிவிட்டதாலும், வில்லனை முதலிலேயே அறிமுகப்படுத்தி விட்டதாலும் படம் பார்க்கும்போது ஒரு த்ரில்லருக்குண்டான பரபரப்பு இப்படத்தில் குறைவாக உள்ளதாக தோன்றுகிறது. சிசிடிவி கேமராக்கள், ட்ராக்கிங் என இத்தனை வசதி இருந்தும் டெலிவரி பாய் சொல்லும் அடையாளங்களை வைத்து வில்லனை வரைந்து கொண்டிருப்பது நம்பும்படி இல்லை. ஓரிரு காட்சிகளைத் தவிர படம் முழுக்க சகட்டு மேனிக்கு லாஜிக் மீறல்கள்.
சைக்கோ கதாபாத்திரம் சொல்லும் காரணம் பார்ப்பவர்களிடையே எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அவ்வளவு பில்டப்புக்குப் பிறகு இதெல்லாம் ஒரு காரணமா? என்று தோன்றும்படி இருக்கிறது. கிட்டத்தட்ட பாதி படத்திலேயே வில்லன் போலீஸிடம் மாட்டிக் கொண்ட பிறகும் ஹீரோ(யின்) கையால் தான் அவர் சாக வேண்டும் என்பதற்காக படத்தை ஜவ்வாக இழுத்து வைத்திருக்கிறார்கள்.
இது போன்ற சைக்கோ த்ரில்லர் படங்களை அதிகம் பார்த்திராத ரசிகர்களுக்கு இப்படம் பிடிக்கலாம். மற்றவர்களுக்கு பல காட்சிகள் ஏற்கெனவே பார்த்தது போன்ற உணர்வு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
இரண்டாம் பாதியின் நீளத்தை கத்தரி போட்டு, திரைக்கதையின் வேகத்தை கூட்டியிருந்தால் சிறந்த த்ரில்லர் படமாக கொண்டாடப்பட்டிருக்கும் ‘நெற்றிக்கண்’.