தனுஷ் படத்தைத் தொடர்ந்து 'கும்கி' இரண்டாம் பாகத்தை இயக்க பிரபுசாலமன் திட்டமிட்டு இருக்கிறார்.
பிரபுசாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2013ம் ஆண்டு வெளியான படம் 'கும்கி'. இமான் இசையமைத்த இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்தது. இப்படத்தின் பாடல்களுக்கும், கதையமைப்புக்கும், காட்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் இருவருக்கும் 'கும்கி' முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தனுஷ், கீர்த்தி சுரேஷ், கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தை இயக்கி இருக்கிறார் பிரபுசாலமன். இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கிராபிக்ஸ் காட்சிகள் அதிகமாக இருப்பதால் படம் கோடை விடுமுறைக்கு தான் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை.
இந்நிலையில், 'கும்கி' 2ம் பாகத்துக்கான கதையை தயாராக வைத்திருக்கிறார் பிரபுசாலமன். முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் நடிப்பது போன்ற விஷயங்கள் எதுவுமே இன்னும் பிரபுசாலமன் முடிவு செய்யவில்லை.
'கும்கி' படத்தை விட பிரம்மாண்டமான பொருட்செலவில் இப்படத்தின் திரைக்கதை அமைப்பை எழுதியிருக்கிறார் பிரபுசாலமன். தனுஷ் படம் வெளியானவுடன், தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட இருக்கிறார். அப்படம் கண்டிப்பாக 'கும்கி 2' ஆக இருக்க வாய்ப்புகள் அதிகம் என்கிறது அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள்.