தமிழ் சினிமா

விஜயகாந்த்துக்கு அடிக்கும் பழக்கம் எஸ்.ஏ.சி-யிடம் இருந்து வந்தது: ராதிகா பரபரப்பு பேச்சு

ஸ்கிரீனன்

விஜயகாந்த்துக்கு அடிக்கும் பழக்கம் இயக்குநர் எஸ்.ஏ.சி-யிடம் இருந்து வந்தது என்று ராதிகா சரத்குமார் குறிப்பிட்டார்.

விஜயகிரண் இயக்கத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர், பா.விஜய், சாந்தினி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'நையப்புடை'. தாஜ்நூர் இசையமைத்திருக்கும் இப்படத்தை காஸ்கோ வில்லேஜ் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக ராதிகா சரத்குமார் கலந்து கொண்டு இப்படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டார்.

இவ்விழாவில் ராதிகா சரத்குமார் பேசியது, "எனக்கு நீண்ட நாட்களாக சந்திரசேகர் சாரைத் தெரியும். இப்போது குடும்ப நண்பர்களாக இருந்து வருகிறோம். அவருடைய இயக்கத்தில் நான் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். அவர் படப்பிடிப்பில் மிகவும் கண்டிப்பானவர். அவரிடம் திட்டு வாங்காதவர் நான் மட்டும் தான். நான் சரியான நேரத்துக்கு சென்று எனது காட்சிகளை நடித்துக் கொடுத்துவிடுவேன்.

இவரிடம் விஜயகாந்த் நிறைய திட்டு வாங்கியிருக்கிறார். அவருக்கு இருக்கும் அடிக்கிற பழக்கம் இவரிடம் இருந்து வந்தது தான். இவரைப் பார்த்து விஜயகாந்த் ரொம்ப பயப்படுவார். இவர் பட்டு பட்டுனு அடிப்பார். சமீபத்தில் விஜயகாந்த்தைப் பார்க்கும் போது இந்த பழக்கம் யாரிடம் இருந்து வந்திருக்கும் என்று நினைத்தேன். இப்போது தான் ஞாபகம் வந்தது, இவரிடம் இருந்து தான் அடிக்கும் பழக்கம் அவருக்கு வந்திருக்கிறது.

என்னை சின்னத்திரை சி.எம் என்கிறார்கள். அதற்கு ஏற்கனவே 8 பேர் போட்டியில் இருக்கிறார்கள். பேசத் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், பேசக்கூடாது என்று நினைப்பர்வர்கள் என எல்லாருமே முதலமைச்சராக வேண்டும் என்று போட்டிப் போடுகிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் மிகவும் அறிவானவர்கள், எவ்வளவு சூடு போட்டாலும் சரி, சரி என்பார்கள். அதை மாற்றவே முடியாது.

'நையப்புடை' ட்ரெய்லர் ரொம்ப அற்புதமாக இருந்தது. 19 வயது இயக்குநருக்கு எனது பாராட்டுகள். வயது என்பது ஒரு எண் மட்டுமே என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் எஸ்.ஏ.சி சார் தான். இன்னும் அதே துடிப்போடு இருப்பதைப் பார்க்கும் போது மிகவும் பெருமையாக இருக்கிறது" என்று தெரிவித்தார் ராதிகா சரத்குமார்.

SCROLL FOR NEXT