தமிழ் சினிமா

பாஸ்கர் தி ராஸ்கல் ரீமேக்: சித்திக் தகவலுக்கு ரஜினி தரப்பு மறுப்பு

ஸ்கிரீனன்

'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தின் தமிழ் ரீமேக் குறித்து இயக்குநர் சித்திக் கூறியிருப்பதற்கு ரஜினிகாந்த் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

மம்முட்டி, நயன்தாரா, ஜே.டி. சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் சித்திக் இயக்கத்தில் வெளியான மலையாள படம் 'பாஸ்கர் தி ராஸ்கல்'. கடந்த ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தின் தமிழ் ரீமேக் குறித்து அவ்வப்போது செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன. மலையாள நாளிதழ் ஒன்றில் 'பாஸ்கர் தி ராஸ்கல்' தமிழ் ரீமேக் குறித்து பேசியிருக்கிறார் இயக்குநர் சித்திக். அதில், "'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தைப் பார்த்த ரஜினி சார், மம்மூட்டி பாத்திரத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார். தயாரிப்பாளரும் முடிவாகிவிட்டது. ஆனால், இன்னும் யாருக்கும் முன்பணம் அளித்து உறுதிப்படுத்தவில்லை. தற்போது 'கபாலி' மற்றும் '2.0' ஆகிய படங்களில் நடித்து வரும் ரஜினி சார் அடுத்த ஆண்டு இப்படத்தின் ரீமேக்கில் நடிக்க தேதிகள் ஒதுக்குவார்" என்று தெரிவித்திருந்தார்.

இயக்குநர் சித்திக்கின் இப்பேட்டி தற்போது சர்ச்சையாகி இருக்கிறது. ரஜினி தரப்பு இச்செய்தி உண்மையில்லை என்று மறுப்பு தெரிவித்திருக்கிறது. இது குறித்து ரஜினி தரப்பில் விசாரித்த போது, "'2.0' படத்தில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார் ரஜினி சார். இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது முடியும் என்று தெரியாது. மேலும், அப்படத்துக்கு பிறகு ரஜினி சார் யாருக்குமே உங்களுக்கு படம் செய்து தருவதாக உறுதிபடுத்தவில்லை. 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தின் ரீமேக் செய்தியில் உண்மையில்லை" என்று தெரிவித்தார்கள்.

SCROLL FOR NEXT