தமிழ் சினிமா

படமாகிறது 'ப்ராஜக்ட் அக்னி': கார்த்திக் நரேன் சூசகம்

செய்திப்பிரிவு

கார்த்திக் நரேனின் ட்வீட்டை முன்வைத்து 'ப்ராஜக்ட் அக்னி' கதை படமாக உருவாகவுள்ளதாகத் தெரிகிறது.

மணிரத்னம் மற்றும் ஜெயந்திரா இணைந்து தயாரித்துள்ள 'நவரசா' ஆந்தாலாஜி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதில் 9 இயக்குநர்கள், 9 கதைகளை இயக்கியுள்ளனர். இதில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான படம் 'ப்ராஜக்ட் அக்னி'.

சயின்ஸ் ஃபிக்சன் பாணியில் உருவான இந்தக் கதையில் அரவிந்த்சாமி, பிரசன்னா, சாய் சித்தார்த், பூர்ணா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த ஆந்தாலஜி கதையில் பலரும் கார்த்திக் நரேன் கதையை வெகுவாகப் பாராட்டியிருந்தார்கள். மேலும், சிலர் இதைப் படமாகப் பண்ண வேண்டும் என்று கார்த்திக் நரேனிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

தனது 'ப்ராஜக்ட் அக்னி' படத்துக்கு வரவேற்பு கிடைத்திருப்பது குறித்து இயக்குநர் கார்த்திக் நரேன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

" 'ப்ராஜக்ட் அக்னி' படத்துக்கு மாபெரும் வரவேற்பை அளித்த பார்வையாளர்களுக்கும், ஊடகங்களுக்கும் மனமார்ந்த நன்றி. விஷ்ணு, கிருஷ்ணா, கல்கி ஆகியோரின் பயணங்கள் இப்போதுதான் தொடங்கியுள்ளன".

இவ்வாறு கார்த்திக் நரேன் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் 'ப்ராஜக்ட் அக்னி' கதை படமாக உருவாகவுள்ளதாகத் தெரிகிறது.

தற்போது தனுஷ், மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'மாறன்' படத்தை இயக்கி வருகிறார் கார்த்திக் நரேன். இதனை சத்யஜோதி மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

SCROLL FOR NEXT