தமிழ் சினிமா

உன் மீது நீயே குற்றம் சுமத்த வேண்டாம்: யாஷிகாவுக்கு வனிதா விஜயகுமார் ஆறுதல்

செய்திப்பிரிவு

உன் மீது நீயே குற்றம் சுமத்த வேண்டாம் என்று யாஷிகா ஆனந்துக்கு வனிதா விஜயகுமார் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 24 அன்று இரவு சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் தனது தோழிகளுடன் நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் மகாபலிபுரம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதிக் கவிழ்ந்தது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழியான வள்ளிச்செட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யாஷிகா சிகிச்சை முடிந்து வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அவருக்கு இடுப்பு மற்றும் கால் ஆகியவற்றில் எலும்புகள் உடைந்து, அதற்கு சிகிச்சை எடுத்துள்ளார். இந்த விபத்து தொடர்பாக யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

விபத்தில் தனது தோழி மரணம் தொடர்பாகச் சில பதிவுகளைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார் யாஷிகா. அதில் "இனி உயிர் வாழ்வதே குற்ற உணர்ச்சியாக இருக்கப் போகிறது" எனக் குறிப்பிட்டு இருந்தார்.

இந்தப் பதிவுக்கு வனிதா விஜயகுமார் யாஷிகா ஆனந்துக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வனிதா விஜயகுமார் கூறியிருப்பதாவது:

"இது யாருக்கும் நிகழக்கூடிய ஒன்று. அதனால்தான் அதன் பெயர் விபத்து. பிறப்பையும் இறப்பையும் யாரும் தீர்மானிப்பதில்லை. அதை யாரும் மாற்ற முடியாது. நீயும் பாதிக்கப்பட்ட ஒரு பெண்தான். உன்னுடைய கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு விஷயத்துக்காக உன் மீது நீயே குற்றம் சுமத்த வேண்டாம்.

மற்றவர்கள் நினைப்பது குறித்து நீ கவலைப்பட வேண்டியதில்லை. உன்னுடைய மனநிலையைத் தெளிவாக வைத்துக்கொள். ஓய்வெடுத்து உடல் நலனை நன்றாகக் கவனித்துக் கொள். நீ இந்த மோசமான விபத்தில் உயிர் பிழைத்திருப்பதில் ஒரு காரணம் இருக்கும். கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும்".

இவ்வாறு வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT