மலையாளத்தில் ஹிட்டடித்த 'மெமரீஸ்' படத்தின் தமிழ் ரீமேக், 'ஈரம்', 'வல்லினம்' படங்களை இயக்கிய அறிவழகனின் மூன்றாவது படம், அருள்நிதி நடிப்பில் வெளியாகும் எட்டாவது படம் என்ற இந்த காரணங்களே ஆறாது சினம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.
டைட்டிலில் இருக்கும் தீவிரத் தன்மை படத்திலும் இருக்கும் என்ற நம்பிக்கையில் தியேட்டருக்குள் நுழைந்தோம்.
ஆறாது சினம் எப்படி?
கதை: ஒரு என்கவுன்டர், போலீஸ் அதிகாரி அருள்நிதியின் வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிறது. குடும்பத்தை இழந்து குடிநோயாளியாகும் அருள்நிதி அதற்குப் பிறகு என்ன ஆகிறார்? என்ன செய்கிறார்? இயல்பு நிலைக்குத் திரும்பினாரா? எப்படி? என்பது மீதிக் கதை.
உளவியலை உள்ளடக்கிய க்ரைம் - த்ரில்லர் படமான 'மெமரீஸ்' படத்தை தமிழில் கொடுக்க முனைந்ததற்காக இயக்குநர் அறிவழகனைப் பாராட்டலாம். ஆனால், அறிவழகன் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.
அருள்நிதி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் கச்சிதம். குடிநோயாளியாக இருந்துகொண்டு பழைய நினைவுகளில் தவிப்பதும், தன்னை புதுப்பித்துக் கொள்ள முடியாமல் திணறுவதும், பாசத்துக்காக பரிதவிப்பதுமாக மனிதர் அசாதாரணமாக அண்டர்ப்ளே செய்திருக்கிறார். இதே போல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தால் நலமும், வளமும் சேரும்.
சில காட்சிகளிலே வந்தாலும் ஐஸ்வர்யா ராஜேஷ் கவனிக்க வைக்கிறார். இயக்குநர் கௌரவ் நாராயணன் கதாபாத்திரத்துகுரிய வேலையை செய்து முடிக்கிறார்.
ராதாரவி, துளசி, ரோபோ சங்கர், சார்லி, போஸ் வெங்கட், அனுபமா, ஆர்.என்.ஆர்.மனோகர், ஐஸ்வர்யா தத்தா, ரித்திகா ஆகியோர் பொருத்தமான தேர்வு.
அரவிந்த் சிங் காமிரா என்கவுன்டர் ஏரியாவில் ஆரம்பித்து தமிழகத்தின் முக்கிய நகரங்கள் வரை எல்லா இடங்களிலும் பயணித்திருக்கிறது. அதனாலேயே என்னவோ குற்றவாளியை நெருங்கும்போது நமக்கும் பதற்றத்தைக் கடத்தியுள்ளார்.
தமனின் இசையும், பின்னணியும் படத்துக்கு பெரும் பலம். தனிமையே தனிமையே பாடல் ரசிக்க வைக்கிறது. திருக்குறளில் கள்ளுண்ணாமை அதிகாரத்தில் உள்ள குறள்களை பாடலாகப் பயன்படுத்திய விதம் அருமை. ராஜேஷ் கண்ணன் முதல் பாதியில் இன்னும் சில இடங்களில் கறாராக கத்தரி போட்டிருக்கலாம்.
ரோபோ ஷங்கர், சார்லி போர்ஷன்களில் ஏன் இத்தனை தொய்வு? சார்லி தேர்ந்த நடிகர்தான். ஆனால், 'பர்த் டே கேக் வெட்டுற மாதிரி வெட்டி இருக்காங்க', 'முதலாமாண்டு நினைவு அஞ்சலியாவது பேசுவாங்களா' போன்ற வசனங்களை ஏன் பேச வைத்திருக்கிறார்கள்?
இதுமாதிரியான எதுகை, மோனை, உவமை, உருவகங்களை சீரியஸ் காட்சிகளில் ஏன் அறிவழகன் சார் திணித்திருக்கிறீகள்?
'மெமரீஸ்' படத்தில் வரும் அந்த குழந்தை குறித்த காட்சியை இதிலும் சேர்த்திருந்தால் குற்றவாளியின் பார்வையை பதுவு செய்த மாதிரி இருந்திருக்கும். படமும் முழுமையடைந்திருக்கும். கதாநாயகனும் இயல்பு நிலைக்கு வருவதாக காட்டியதில் அர்த்தம் இருந்திருக்குமே அறிவழகன் சார்? ஏன் அதை தவிர்த்தீர்கள்?
இதையெல்லாம் தவிர்த்து விட்டுப் பார்த்தால், குடியின் பிரச்சினைகளை பிரச்சாரமாக பதிவு செய்யாமல், கதைக்குள் நகர்த்திய விதத்திலும், குடி நோயாளி அதிலிருந்து மீண்டு வெளிவருவதை அழுத்தமாக பதிவு செய்த விதத்திலும், க்ரைம் த்ரில்லர் படத்துக்கான எல்லா அம்சங்களையும் உள்ளடக்கிய விதத்திலும் 'ஆறாது சினம்' கவனிக்க வைக்கிறது.
தியேட்டரில் படம் முடிந்த பிறகு, "ஃபர்ஸ்ட் ஆஃப்லயும் கொஞ்சம் கிரிஸ்பா இருந்திருந்தா, படம் இன்னும் பெட்டரா வந்திருக்கும்” என்று தன் நண்பர்களிடம் ஓர் இளைஞர் சொன்னது, சூப்பரான 'ட்வீட் ரிவ்யூ'வாக பட்டது.