ஜெயம் ரவி நடித்திருக்கும் 'மிருதன்' படத்தைப் பார்த்த மறுதணிக்கை அதிகாரிகள் படத்துக்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
'தனி ஒருவன்' படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடித்து வெளிவர இருக்கும் படம் 'மிருதன்'. லட்சுமி மேனன் நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை சக்தி செளந்தர் ராஜன் இயக்கியுள்ளார். இமான் இசையமைக்க, இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ளார்.
இப்படத்தின் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றி இருக்கும் ஐங்கரன் நிறுவனம், படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என அறிவித்தது. படத்தின் இறுதிகட்டப் பணிகள் முடிந்தவுடன் படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்துக்கு 'ஏ' சான்றிதழ் வழங்கினார்கள். இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்தது.
தொலைக்காட்சி திரையிடலுக்கு என்று தனியாக எடிட் செய்யப்பட்டு சென்சார் செய்ய வேண்டும், உள்ளிட்ட பல பிரச்சினைகள் இருந்ததால் படத்தை மறுதணிக்கை அதிகாரிகளுக்கு திரையிட முடிவு செய்தார்கள். அவர்கள் என்ன சான்றிதழ் அளித்தாலும், பிப்ரவரி 19ம் தேதி படம் வெளியாகும் என படக்குழு அறிவித்து, அதற்கான பணியில் இறங்கியது.
இப்படத்தைப் பார்த்த மறுதணிக்கை அதிகாரிகள் சில இடங்களை மட்டும் நீக்கச்சொல்லி 'யு/ஏ' சான்றிதழ் வழங்கினார்கள். இதனால் படக்குழு மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறது.