கெளதம் மேனன் இயக்கத்தில் 'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தனுஷ் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு இருக்கிறார்.
துரை.செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் 'கொடி'. இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தனுஷ், அனுபமா, காளி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இப்படத்தை முதல் பிரதி அடிப்படையில் எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படத்தைத் தொடர்ந்து 'வடசென்னை' மற்றும் ஹாலிவுட் படம் என இரண்டு படங்களில் தனுஷ் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின. மேலும் ஆச்சர்யமூட்டும் விதமாக கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாகவும், இப்படத்தின் படப்பிடிப்பு 'கொடி' படப்பிடிப்பு முடிந்தவுடன் தொடங்கப்படும் என்று செய்திகள் வெளியாகின.
'க்ரீன் டீ வித் கௌதம்' எனப் பெயரிடப்பட்டுள்ள நிகழ்ச்சியின் முதல் 2 பகுதிகளில், தனுஷ் மற்றும் அனுஷ்கா ஆகியோரை கௌதம் மேனன் பேட்டி கண்டுள்ளார் கெளதம் மேனன். இப்பேட்டியின் போது தான் தனுஷ் - கெளதம் மேனன் கூட்டணி உருவாகி இருக்கிறது.
'என்னை நோக்கி பாயும் தோட்டா' என்ற தலைப்பில் சூர்யாவுடன் பணியாற்ற இருந்த படத்தைத் தான் கெளதம் மேனன், தனுஷை வைத்து 'என்மேல் பாயும் தோட்டா' என்ற பெயரில் படமாக்க திட்டமிட்டு இருப்பதாக கெளதம் மேனனுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள்.
தற்போது தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கெளதம் மேனன் இயக்கத்தில் நடிக்கப் போவதை உறுதிப்படுத்தி இருக்கிறார். "நீண்ட கால விவாதங்களுக்குப் பின் நிறைவான முடிவு கிடைத்திருக்கிறது. 'கொடி' படத்தைத் தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் 'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் நடிக்க இருக்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.
ஜூன் மாதம் முதல் ஹாலிவுட் படத்துக்கு தேதிகள் ஒதுக்கி இருக்கும் தனுஷ், வெற்றிமாறனின் 'வடசென்னை' படத்தின் படப்பிடிப்பை இந்த ஆண்டு இறுதியில் தொடங்குவார் எனத் தெரிகிறது.