தமிழ் சினிமாவில் ஒரு இசையமைப்பாளராகவும், நாயக நடிகராகவும் வெற்றி பெற்று ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்றிருக்கும் விஜய் ஆண்டனி இன்று (ஜூலை 24) தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.
2005இல் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய 'சுக்ரன்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ்த் திரைப்பட உலகுக்கு அறிமுகமானார் விஜய் ஆண்டனி. புதுவிதமான ஒலிகள், ஆட்டம்போட வைக்கும் மெட்டுகள் என இருந்த அந்தப் படத்தின் பாடல்கள் ரசிகர்களைக் கவர்ந்தன. தொடர்ந்து 'டிஷ்யூம்', 'நான் அவனில்லை', 'நினைத்தாலே இனிக்கும்' போன்ற படங்களில் விஜய் ஆண்டனியின் பாடல்கள் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தன.
சற்று ஸ்டைலிஷான குத்துப் பாடல்களும் மெலடிப் பாடல்களும் விஜய் ஆண்டனியின் தனித்துவ முத்திரையைத் தாங்கியிருந்தன. 'காதலில்' விழுந்தேன்' படத்தில் அனைத்துப் பாடல்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று படத்தின் வெற்றிக்குப் பங்களித்தன. அதில் 'அட்ரா அட்ரா நாக்குமுக்க' என்னும் அதிவேக குத்துப் பாடல் 'உனக்கென நான் எனக்கென நீ' என்னும் மென்சோக மெலடிப் பாடல் 'தோழியே என் காதலியா' என்னும் சற்றே வேகமான டூயட் பாடல் எனக் கலவையான பாடல்களில் தன்னுடைய அபார இசைத்திறமையை நிரூபித்தார் விஜய் ஆண்டனி.
அடுத்ததாக விஜய் நடித்த 'வேட்டைக்காரன்' படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்ததன் மூலம் இன்னும் பரவலான ரசிகர் பரப்பைச் சென்றடைந்தார். அந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் வெற்றி பெற்றன. விஜய்யுடன் மீண்டும் இணைந்த 'வேலாயுதம்' படத்திலும் மறக்க முடியாத வெற்றிப் பாடல்கள் அமைந்தன. தனுஷ் நடித்த 'உத்தமபுத்திரன்', விஷால் நடித்த 'வெடி' என நட்சத்திர நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துக்கொண்டே 'அங்காடித் தெரு', 'அவள் பெயர் தமிழரசி' போன்ற யதார்த்தத்துக்கு நெருக்கமான படங்களுக்கும் சிறப்பான இசையை வழங்கினார்.
2012இல் வெளியான 'நான்' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக புதுமுகம் காட்டினார் விஜய் ஆண்டனி. ரசிகர்களை சீட்டின் நுனியில் அமரவைத்த த்ரில்லர் படமான 'நான்' விமர்சகர்களின் பாராட்டையும் வணிக வெற்றியையும் பெற்றது. அந்த வெற்றி அளித்த நம்பிக்கையில் விஜய் ஆண்டனி நடித்த 'சலீம்' திரைப்படமும் ஹிட் ஆனது. இதற்குப் பிறகு கதாநாயகனாகவும் கதையின் நாயகனாகவும் நடிப்பதில் முதன்மை கவனம் செலுத்திவருகிறார். தான் நடிக்கும் படங்களுக்கு மட்டுமே இசையமைக்கிறார். விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் என்னும் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி தயாரிப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார்.
'டிஷ்யூம்' படத்துக்குப் பின் இயக்குநர் சசியுடன் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நாயகனாகவும் கைகோத்த 'பிச்சைக்காரன்' மிகப் பெரிய வணிக வெற்றியையும் விமர்சகர்களின் பாராட்டையும் குவித்தது. இந்தப் படத்தின் தெலுங்கு மொழிமாற்ற வடிவமான 'பிச்சகாடு' வசூல் சாதனை புரிந்தது. தெலுங்கு சினிமாவிலும் விஜய் ஆண்டனி படங்களுக்கு ஒரு மார்க்கெட் உருவானது.
இவை தவிர 'சைத்தான்', 'யமன்', 'அண்ணாதுரை', 'காளி', 'திமிரு புடிச்சவன்' ஆகிய படங்கள் விஜய் ஆண்டனியை நாயகனாகக் கொண்டு வெளியாகியுள்ளன. 'திமிரு புடிச்சவன்' படத்தில் படத்தொகுப்பையும் கவனித்தார். தற்போது ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் 'கோடியில் ஒருவன்', 'மூடர்கூடம்' புகழ் ம.நவீன் இயக்கும் படத்தில் அருண் விஜய்யுடன் இணைந்து இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடித்துவருகிறார்.
ஒரு நடிகராக வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்ட தரமான திரைப்படங்களில் நடிப்பவர் நட்சத்திர இமேஜைப் பற்றிக் கவலைப்படாமல் கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் அளிப்பவர் என ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்றிருக்கிறார் விஜய ஆண்டனி. இதுவே அவரை ஒரு மதிப்புக்குரிய நாயக நடிகராக ஆக்கியிருக்கிறது.
அடுத்ததாக விஜய் ஆண்டனி இயக்குநர் அவதாரம் எடுக்கவிருக்கிறார். தன் திரைவாழ்வின் மிகப் பெரிய வெற்றிப் படத்தின் இரண்டாம் பாகமான 'பிச்சைக்காரன் 2'வை இயக்கப் போகிறார் விஜய் ஆண்டனி. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகப் போகும் இந்தப் படத்தில் நாயகன், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் பொறுப்புகளையும் அவரே ஏற்றுள்ளார். 2022இல் 'பிச்சைக்காரன் 2' திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், படத்தொகுப்பாளர், இயக்குநர் என பன்முகத் திறன் கொண்ட விஜய் ஆண்டனி மேலும் பல தரமான வெற்றிப் படங்களைக் கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்து திரைப் பயணத்தில் மேன்மேலும் உயர வேண்டும் என்று மனதார வாழ்த்துவோம்.