தமிழ் சினிமா

மணிரத்னம் ரிமேக்கில் ஈடுபாடு காட்டாதது ஏன்?- சுஹாசினி பதில்

கே.பூமிகா

பெண் இயக்குநர்கள், அவர்களின் பார்வையில் இருந்து கதை சொல்லும் நிலை ஏற்பட வேண்டும் என்கிறார் சுஹாசினி.

நடிகையும், திரைப்படத் தயாரிப்பாளருமான சுஹாசினி மணிரத்னம், சினிமாவின் வலிமையான குரல் இன்னும் ஆண்களுடையதாக மட்டுமே இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட சுஹாசினி, கணவர் மணிரத்னத்துடனான தன் வேலை, பலதரப்பட்ட மொழிகளைக் கற்றுக்கொள்வது, சினிமா தொழில்நுட்பம், ரீமேக் படங்கள், இளம் இயக்குநர்களுடன் வேலை பார்ப்பது என்று பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார்.

"இப்போது நான் பெண்ணாக உணரவில்லை. ஒரு மனிதராகவே உணர்கிறேன். 40 வயதுக்குப் பிறகு பெண்கள், தாங்கள் பெண்கள் என்பதையே மறந்துவிடுகின்றனர். எல்லாருக்கும் எல்லாவற்றிலும் குறிப்பிட்ட அளவு சுதந்திரம் இருக்கிறது. யாராலும் துன்புறுத்தப்படாத வரை, பெண்கள் அவர்களின் திறமையைப் பொறுத்து ஏராளமானவற்றை சாதிக்க முடியும்.

சினிமாவில் பெண்கள்...

பெண் இயக்குநர்கள், அவர்களின் பார்வையில் இருந்து கதையைச் சொல்லும் நிலை ஏற்பட வேண்டும். என்னுடைய தந்தை சாருஹாசன் அடிக்கடி, 'மற்றவர்கள் பெண்களுக்கான தொழிலையும், பொருளாதார சுதந்திரத்தையும் அளிக்கலாம். ஆனால் உணர்வுரீதியான சுதந்திரம் அவளிடம் இருந்தே வரவேண்டும்!' என்று கூறுவார். நான் இன்னும் அதில் இருந்து வெளியே வரவில்லை. வந்திருந்தால் ஒருவேளை 20 படங்களையாவது இயக்கி இருப்பேன், அல்லது சமூக சேவையில் முழுமையாக ஈடுபட்டிருப்பேன். அதுவும் இல்லையென்றால் அரசியலில் சேர்ந்திருப்பேன்.

பெண்களாகிய நாங்கள், எளிமையான வழியைத்தான் தேடிச் செல்கிறோம். அப்படித்தான் நான் நடிகையானேன். ஆனால் ஆண்கள் அப்படியில்லை. ரிஸ்க் எடுக்கிறார்கள். அவர்களை நான் முழு மனதோடு பாராட்டுகிறேன்.

ரீமேக் பற்றி...

என்னுடைய கணவர் மணிரத்னம் ரீமேக் படங்களை எடுக்க மாட்டார். அவருடைய படங்களை ரீமேக் செய்வதிலும் அவருக்கு விருப்பமில்லை. அது உங்களின் குழந்தை படிப்பதைப் போல, பக்கத்து வீட்டு குழந்தை படிப்பதற்கு சமம்."

SCROLL FOR NEXT