சென்னையில் 'காசேதான் கடவுளடா' ரீமேக்கின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
சித்ராலயா கோபு இயக்கத்தில், முத்துராமன், ஸ்ரீகாந்த், தேங்காய் ஸ்ரீனிவாசன், மனோரமா, லக்ஷ்மி உள்ளிட்ட பலர் நடிக்க ஏவிஎம் தயாரித்த படம் 'காசேதான் கடவுளடா'. 1972ஆம் ஆண்டு இந்தப் படம் வெளியானது. தமிழ் சினிமாவின் சிறந்த நகைச்சுவைப் படங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது.
இந்தப் படத்தின் ரீமேக்கை ஆர்.கண்ணன் கைப்பற்றினார். இன்று (ஜூன் 16) இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டது. இதில் மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், 'குக் வித் கோமாளி' புகழ் சிவாங்கி, கருணாகரன், தலைவாசல் விஜய், மனோபாலா உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இசையமைப்பாளராக கண்ணன், ஒளிப்பதிவாளராக பாலசுப்பிரமணியம் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.
'காசேதான் கடவுளடா' ரீமேக் குறித்து இயக்குநர் கண்ணன் கூறியிருப்பதாவது:
"மிகுந்த உற்சாகத்துடன் இன்று படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளோம். ஒரே கட்டமாக 45 நாட்களில் படப்பிடிப்பை முடிக்கவுள்ளோம். நீண்ட கோவிட் பொதுமுடக்கக் காலத்திற்குப் பிறகு தொழில்நுட்பக் கலைஞர்களையும், நடிகர்களையும் ஒன்றாகப் பணியில் பார்ப்பது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது.
இன்னொரு புறம் தமிழின் எவர்கிரீன் கிளாசிக் காமெடிப் படமாக, மக்களின் மனதில் என்றென்றும் நிற்கும் 'காசேதான் கடவுளடா' படத்தை அதன் தரம் சற்றும் குறையாமல் ரீமேக் செய்யவேண்டிய கடமையுணர்வு உள்ளது.
தங்களது அற்புத நடிப்பு, திறமை, நகைச்சுவை உணர்வால் மக்களை மகிழ்விக்கும் நடிகர் குழு இப்படத்தில் இணைந்துள்ளது. குடும்பங்கள் இணைந்து கொண்டாடும் படைப்பாக, தியேட்டரில் சிரிப்பு மழை பொழியும் படைப்பாக இப்படம் இருக்கும்".
இவ்வாறு இயக்குநர் கண்ணன் தெரிவித்துள்ளார்.