சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களின் வசூலை 'ரஜினி முருகன்' திரைப்படம் முறியடித்து சாதனை படைத்திருக்கிறது.
பொன். ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி, ராஜ்கிரண், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'ரஜினி முருகன்'. ஜனவரி 14ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
முதல் 4 நாட்களில் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' வசூலை 'ரஜினி முருகன்' தாண்டிவிட்டதாக சிவகார்த்திகேயன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஜனவரி 14ம் தேதி வெளியான இப்படத்துக்கு கடந்த வாரம் வரை திரையரங்கில் நல்ல வசூல் கிடைத்திருக்கிறது.
இது குறித்து விநியோகஸ்தர் ஒருவரிடம் பேசிய போது, "சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களின் மொத்த வசூலை இப்படம் தாண்டிவிட்டது. ஏனென்றால் இந்த வாரம் இரண்டு புதிய படங்கள் வெளியான போதிலும், 'ரஜினி முருகன்' படத்துக்கும் நல்ல கூட்டம் இருந்தது.
கண்டிப்பாக சிவகார்த்திகேயன் இப்படத்தின் வசூல் மூலமாக அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துவிட்டார். எங்களுக்கு மட்டுமல்ல, திரையரங்கில் கேன்டீன் வைத்திருப்பவர்கள் வரை நல்ல லாபம் கிடைத்திருக்கிறது." என்று தெரிவித்தார்.
'ரஜினி முருகன்' படத்தைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் பாக்யராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம் வெளியாக இருக்கிறது. தற்போதே இப்படத்துக்கு விநியோகஸ்தர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.