மறைந்த நடிகர் திலீப் குமார் தனது தந்தை எம்.ஆர்.ராதா நடித்த 'ரத்தக் கண்ணீர்' படத்தின் பெரிய ரசிகர் என்று நடிகை ராதிகா சரத்குமார் பகிர்ந்துள்ளார்.
பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார், மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார். மும்பையின் கர் பகுதியில் இருக்கும் ஹிந்துஜா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஜூலை 7ஆம் தேதி காலை 7.30 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி திலீப் குமார் காலமானார்.
திலீப் குமாரின் மறைவுக்கு அமிதாப் பச்சன், கமல்ஹாசன் எனப் பல மூத்த நடிகர்களும், இளம் நடிகர்களும் இரங்கல் தெரிவித்தனர். பலர் திலீப் குமாருடனான தங்கள் மறக்க முடியாத நினைவுகளையும் பகிர்ந்திருந்தனர்.
நடிகை ராதிகாவும் திலீப் குமாரைத் தான் சந்தித்த நினைவு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். திலீப் குமார், நடிகை ரேகா, ராதிகா மற்றும் அவரது அம்மா இணைந்து எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை ராதிகா தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
"திலீப், ரேகா, என் அம்மாவுடன் எடுத்துக்கொண்ட உன்னதமான ஒரு புகைப்படம். அவர் எனது அப்பாவின் மிகப்பெரிய ரசிகர்கள். அவர் மீது தனக்கிருக்கும் அபிமானத்தை, குறிப்பாக 'ரத்தக் கண்ணீர்' திரைப்படத்தை ரசித்தது பற்றி என்னிடம் சொன்னார். 'நீ நடிக்கும்போது உனது கண்களை நன்றாகப் பயன்படுத்து. அதுதான் உன் ஆன்மாவை பிரதிபலிக்கும்' என்று எனக்கு அறிவுரை கொடுத்தார்" என்று இந்தப் புகைப்படத்துடன் ராதிகா பதிவிட்டுள்ளார்.
யூசுப் கான் என்ற இயற்பெயரைக் கொண்ட திலீப் குமார் பாலிவுட்டின் 1950, 60களில் பாலிவுட்டின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தார். அவரது நடிப்பில் வெளியான ‘தேவ்தாஸ்’, ‘மொகல்-இ-அஸாம்’, ‘கங்கா ஜமுனா’ உள்ளிட்ட படங்கள் இன்றும் பாலிவுட் ரசிகர்களால் கொண்டாடப்படுபவை. 65க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள திலீப் குமார் கடைசியாக 1998ஆம் ஆண்டு வெளியான ‘கிலா’ என்ற படத்தில் நடித்திருந்தார்.