தமிழ் சினிமா

ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதாவால் தயாரிப்பாளருக்கு ஏற்படும் சிக்கல்: டி.சிவா கருத்து

செய்திப்பிரிவு

ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதாவால் தயாரிப்பாளருக்கு ஏற்படும் சிக்கல் குறித்து தயாரிப்பாளர் டி.சிவா கருத்து தெரிவித்துள்ளார்.

ஜூன் 18-ம் தேதி ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதாவை வெளியிட்டது மத்திய அரசு. அந்த மசோதா வெளியானதிலிருந்து இந்தியா முழுக்க உள்ள பல்வேறு திரைக் கலைஞர்கள் தங்களுடைய கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறார்கள். இது தொடர்பாக 1400 கலைஞர்கள் ஒன்றிணைந்து மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கடிதம் எழுதினார்கள்.

தமிழ்த் திரையுலகில் இந்த மசோதாவுக்கு கமல் தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார். அவரைத் தொடர்ந்து சூர்யா, விஷால், கார்த்தி, கெளதம் மேனன், கார்த்திக் சுப்புராஜ், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், நீரவ் ஷா, தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்பைத் தங்களுடைய சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளனர்.

தற்போது ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தயாரிப்பாளர் டி.சிவா கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

"தேச விரோத கருத்துகள் ஒரு திரைப்படத்தில் இருந்தால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் எப்போது வேண்டுமானாலும் தடை செய்யலாம். வேறு எந்தக் காரணத்துக்காகவும் தணிக்கை செய்த பிறகு அதைத் தடை செய்யும் உரிமை யாருக்கும் இருக்கக் கூடாது. அப்படி ஒரு சட்டம் வந்தால் பணம் போட்ட தயாரிப்பாளர்களின் நிலை எந்த நேரத்திலும் கேள்விக்குறியாகிவிடும்.

இது கருத்துச் சுதந்திரம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. மொத்த முதலீடும் போட்டுப் படத்தை வெளியிட்டபின் அந்தப் படம் தடை செய்யப்பட்டால் தயாரிப்பாளரின் நிலைமை என்ன ஆவது. எனவே புதிய சட்ட மசோதாவை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெறவேண்டும்".

இவ்வாறு தயாரிப்பாளர் டி.சிவா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT