ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கவிருக்கும் புதிய படம் முழுக்க மும்பையில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
சோனாக்ஷி சின்ஹா, அனுராக் கஷ்யாப், ராய் லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்தி படம் 'அகிரா'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாக இருக்கிறது.
இப்படத்தைத் தொடர்ந்து மகேஷ்பாபு நடிக்கவிருக்கும் படத்தை இயக்க இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் இப்படத்தை தாகூர் மது மற்றும் பிரசாத் இருவரும் இணைந்து பெரும் பொருட்செலவில் தயாரிக்க இருக்கிறார்கள்.
இப்படத்தை முழுக்க மும்பையில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். 'துப்பாக்கி' படத்தை முழுக்க மும்பையில் தான் படமாக்கினார். படமும் சூப்பர் ஹிட்டானது. அந்த சென்டிமென்ட் இப்படத்துக்கும் தொடர்கிறது என்கிறது அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள்.
தற்போது 'பிரம்மோற்சவம்' படத்தில் நடித்து வரும் மகேஷ்பாபு, அப்படத்தைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் முதல் ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியிருக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார்.