தமிழ் சினிமா வரலாற்றில் ரசிகர்களின் பெருமதிப்பைப் பெற்ற இயக்குநர்களில் ஒருவர் சேரன். அவர் அந்த நன்மதிப்பைப் பெறக் காரணமாக அமைந்த படங்களில் முக்கியமான ஒன்றான 'வெற்றிக்கொடிகட்டு' 21 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான நாள் இன்று (2000, ஜூன் 30).
சேரன் இயக்கிய முதல் திரைப்படம் 'பாரதி கண்ணம்மா'. கிராமத்துப் பின்னணியில் சாதியக் கொடுமையையும் அதனால் துண்டாடப்படும் மனித உறவுகளையும் பேசி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவைத் திரும்பிப் பார்க்க வைத்தது. அடுத்ததாக அவர் இயக்கிய 'பொற்காலம்' பிறவியிலேயே உடல்ரீதியான குறைபாடுகளுடன் பிறப்பவர்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் புறக்கணிப்பைப் பரிவுடன் பதியவைத்தது.
மூன்றாம் படமான 'தேசிய கீதம்' அரசியல்வாதிகள், அதிகார வர்க்கத்தின் ஊழல்களாலும் பாராமுகத்தாலும் வதைபடும் கிராமங்களின் அவல நிலையைப் பறைசாற்றியது. சமூக பிரச்சினைகளைத் தீவிரமாகப் பேசிய இந்த மூன்று படங்களும் மனித உணர்வுகளையும் உறவுகளையும் ரத்தமும் சதையுமாக மண் மணம் மாறாமல் பதிவு செய்து சேரனைத் தமிழ் மண்ணில் முகிழ்ந்த அசலான திரைப் படைப்பாளியாக அடையாளப்படுத்தின. நான்காவதாக அவர் இயக்கிய 'வெற்றிக்கொடிகட்டு' இதே பாதையில் பயணித்து சேரன் என்னும் படைப்பாளியின் நற்பெயர் மேம்படச் செய்தது.
எம்.ஜி.ஆரின் 'விவசாயி' திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலில் மருதகாசி எழுதிய 'என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்' என்னும் ஒற்றை வரி சொன்ன செய்தியை இரண்டரை மணி நேரத் திரைப்படமாக விரிவாகவும் விளக்கமாகவும் மனதிலிருந்து அகலாதவண்ணம் பதிய வைக்கும் முயற்சியாக 'வெற்றிக்கொடிகட்டு' படத்தை அடையாளப்படுத்தலாம்.
1967இல் 'விவசாயி' வெளியானபோது நிலவிய சூழலும் 1990களின் உலகமயமாக்கலுக்குப் பிந்தைய சூழலும் முற்றிலும் வெவ்வேறானவை. சர்வதேச சந்தையில் பல தலைகீழ் மாற்றங்கள் நிகழ்ந்திருந்தன. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் நகர்ப்புறங்கள் மட்டுமல்லாமல் சிறுநகரங்களிலிருந்து கிராமங்களிலிருந்து அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களும் நடுத்தர வயதினரும் வேலை தேடியும் நிறைய செல்வம் சேர்த்து வாழ்நிலையில் மேம்படும் கனவுகளுடன் வெளிநாடுகளுக்குச் செல்லத் துடித்த காலகட்டம் அது. பணக்காரர்கள், பரம்பரையாக மெத்தப் படித்தவர்களும் மட்டுமே வெளிநாடுகளுக்குச் செல்ல முடியும் என்கிற சூழல் மாறி முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கும் பட்டப்படிப்பை முடிக்காத திறன் தொழிலாளர்களுக்கும்கூட வெளிநாடுகளில் பணி வாய்ப்புகள் உருவாகியிருந்தன.
ஆனால், இந்தச் சூழலைப் பயன்படுத்தி வெளிநாட்டுக்குச் செல்ல உதவுவதாக அப்பாவி மக்களை ஆசை காட்டி ஏமாற்றி அவர்களின் வாழ்நாள் சேமிப்புகளை வீட்டுப் பெண்களின் நகைகள் உள்பட சொத்துகளை விற்றுப் பெறப்பட்ட பணத்தை அபகரித்துக் கொண்டு ஓடும் மோசடிக்காரர்களும் அதிகரிக்கத் தொடங்கினர். இந்தக் கயவர்களிடம் பணத்தைப் பறிகொடுத்து வாழ்வை இழந்தவர்களில் பாமரர்கள் மட்டுமல்லாமல் படித்துப் பட்டம் பெற்றவர்களும் இருந்தனர்.
பல இளைஞர்களை அவர்தம் குடும்பங்களைப் புரட்டிப்போட்ட இந்தப் பிரச்சினையை முதலில் திரையில் பதிவு செய்த படம் 'வெற்றிக்கொடிகட்டு'. மோசடிக்காரர்களை அம்பலப்படுத்தியதோடு தலையை அடமானம் வைத்தாவது வெளிநாட்டுக்குச் சென்றுவிட வேண்டும் என்னும் மக்களின் மனநிலையே மோசடிகளுக்குக் காரணமாக அமைவதையும் சுட்டிக்காட்டியிருப்பார். சாதிக்கும் ஆர்வமும் விடா முயற்சியும் கடுமையான உழைப்பும் இருந்தால் உள்ளூரிலிருந்தபடியே உலகை ஆளலாம் என்னும் நன்நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் படத்தை உருவாக்கியிருப்பார் சேரன்.
இந்தப் பிரச்சினைகளை மட்டும் பேசியிருந்தால் இது ஒரு ஆவணப் படம் போல் ஆகியிருக்கும். நெல்லை மாவட்ட கிராமத்திலிருந்தும், கோவை மாவட்ட கிராமத்திலிருந்தும் வரும் இரண்டு இளைஞர்கள் அவர்தம் குடும்பச் சூழல், வறுமை, தமிழ்க் குடும்பங்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கைப்பாடுகள் ஆகியவற்றுடன் அன்பு, பாசம், நட்பு வேடிக்கை, எப்படியாவது முன்னேறிவிடுவோம் என்னும் நம்பிக்கை, அயரா உழைப்பு என அனைத்தையும் வியர்வையின் கசகசப்பும், கண்ணீரின் ஈரமும் உணரப்படும் வகையில் படமாக்கினார் சேரன்.
மோசடியால் பாதிக்கப்படும் இரண்டு நாயகர்களும் வெளிநாட்டில்தான் இருக்கிறார்கள் என்று தமது குடும்பங்களை நம்ப வைப்பதற்கான தற்காலிக ஏற்பாடாக இவர் வீட்டுக்கு அவரும் அவர் வீட்டுக்கு இவரும் சென்று தங்கிக்கொள்வது, சென்ற இடத்தில் தங்கள் சொந்த முயற்சியில் முன்னேறுவது அந்தந்தக் குடும்பங்களில் நிலவும் பிரச்சினைகளைக் களைய உதவுவது என்னும் கதையமைப்பு புதுமையானதாகவும் ரசிக்கத்தக்கதாகவும் அமைந்திருந்தது.
சேரனின் முதல் இரண்டு படங்களில் நாயகர்களாக நடித்த பார்த்திபன், முரளி இருவரும் இந்தப் படத்தில் நடித்திருப்பார்கள். மிகை நாயகத் தன்மைக்கான எந்த விஷயத்தையும் திணிக்கச் சொல்லாமல் கதைக்குத் தேவையான நடிப்பை இருவரும் வெகு சிறப்பாகத் தந்திருப்பார்கள். முரளியின் அன்னையாக மனோரமா, மகனின் முன்னேற்றத்துக்கான எதிர்பார்ப்பையும் மகள்களின் பிரச்சினைகள் தீர்வதற்கான ஏக்கத்தையும் உயிரோட்டத்துடன் வெளிப்படுத்தியிருப்பார். பார்த்திபனின் காதல் மனைவியாக மீனா, தந்தையைப் பிரிந்து வந்து அவர் முன்னிலையில் சாதித்துக்காட்டும் வைராக்கியத்தையும் கணவனின் தங்கைகளின் நலன் காக்கும் பொறுப்பையும் முதிர்ச்சியுடன் வெளிப்படுத்தியிருப்பார்.
பார்த்திபன்-வடிவேலு நகைச்சுவை, ரசிகர்களை விலா நோகச் சிரிக்க வைத்தது. இந்த நகைச்சுவை இணை பிரபலமடைந்ததற்கு இந்தப் படத்தின் நகைச்சுவைக் காட்சிகள் பெரும் பங்கு வகித்தன. 'நா கேக்ரான் மேக்ரான் கம்பெனில வேல பாத்தேன்', 'நான் ஃபளைட்லயே டிக்கெட் எடுக்காமதான் வந்தேன்', 'ஒட்டகத்துப் பால்ல டீ போடு' என்பது போன்ற அமரத்துவம் பெற்ற நகைச்சுவை வசனங்கள் இன்று மீம் மெட்டீரியல்களாக பிரபலம் ஆகியுள்ளன. .
மோசடிக்காரர்களிடம் பணத்தை இழந்ததால் மனநிலை பிறழ்ந்தவர்போல் நடிக்க நேரும் சார்லி, கடமை தவறாத காவல்துறை அதிகாரியாக ராஜீவ் எனத் துணை நடிகர்களும் பார்வையாளர்கள் மனங்களில் நீடித்து நிற்கும் வகையிலான பங்களிப்பை அளித்திருந்தார்கள். தேவாவின் இசையில் அமைந்த 'கறுப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு' பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்தது. இன்றளவும் மிக பிரபலமான தமிழ்த் திரைப்படப் பாடல்களில் ஒன்றாக அமைந்துவிட்டது. படத்தின் மற்ற பாடல்களும் வெற்றி பெற்றன.
அனைத்து விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டு மக்களின் அங்கீகாரமான பெரும் வணிக வெற்றியைப் பெற்ற 'வெற்றிக்கொடிகட்டு' படத்துக்கு சமூகப் பிரச்சினைகளைப் பேசிய சிறந்த திரைப்படம் என்னும் பிரிவில் தேசிய விருது அளிக்கப்பட்டது அந்த விருதுக்கே மிகப் பொருத்தமான தேர்வு என்று சொல்லலாம். சேரன் இயக்கிய திரைப்படத்துக்குக் கிடைத்த முதல் தேசிய விருது இதுவே. 2000ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் விருதையும் இப்படம் வென்றது. இன்றளவும் தொலைக்காட்சியில் எப்போது ஒளிபரப்பப்பட்டாலும் அதிக எண்ணிக்கையிலான ரசிகர்களால் பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகத் திகழ்கிறது 'வெற்றிக்கொடிகட்டு'.
'ஆட்டோஃகிராப்', 'தவமாய் தவமிருந்து' ஆகியவை சேரனுடைய மாஸ்டர் பீஸ்கள் என்று கருதப்படுகின்றன. இரண்டு படங்களும் தேசிய விருதுகளை வென்றன. 'வெற்றிக்கொடிகட்டு' அந்தப் பெரும் படைப்புகளுக்கான அழுத்தமான முன்னறிவிப்பு என்று சொல்லலாம்.