தமிழ் சினிமா

தமிழில் ரீமேக் ஆகிறது அஞ்சாம் பத்திரா

செய்திப்பிரிவு

மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'அஞ்சாம் பத்திரா' திரைப்படம் தமிழில் ரீமேக் ஆகவுள்ளது.

ஆஷிக் உஸ்மான் தயாரிப்பில், மிதுன் மானுவேல் தாமஸ் இயக்கத்தில் வெளியான படம் 'அஞ்சாம் பத்திரா'. இந்தப் படத்தில் குஞ்சாகோ போபன், ஷரஃப்பு தீ, உன்னிமயா பிரசாத் உள்ளிட்டோர் நடித்தனர். காவல்துறையினரை இரக்கமின்றித் தொடர் கொலைகள் செய்யும் கொலைகாரனைக் கண்டுபிடிக்கும் த்ரில்லர் கதை இது.

2020-ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி வெளியான இந்தத் திரைப்படம் கிட்டத்தட்ட ரூ.60 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. விமர்சகர்களிடமும் பாராட்டைப் பெற்றது. இந்தப் படத்தின் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது.

இதன் இந்தி ரீமேக்கை ரிலையன்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட், ஆஷிக் உஸ்மான் ப்ரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஏபி இண்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளன. தற்போது இதன் தமிழ் ரீமேக்கும் உறுதியாகியுள்ளது.

இதில் நாயகனாக அதர்வா நடிக்கவுள்ளது உறுதியாகி இருக்கிறது. யார் இயக்குநர், யார் தயாரிப்பாளர் உள்ளிட்டவற்றை மிகவும் ரகசியமாக வைத்துள்ளனர். விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

SCROLL FOR NEXT