நயன்தாராவுடன் எப்போது திருமணம் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'. லலித் குமார் வழங்க, முதல் பிரதி அடிப்படையில் விக்னேஷ் சிவன் தயாரித்து வருகிறார். அனிருத் இசையமைத்து வருகிறார்.
இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. அக்டோபரில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்தப் படத்தின் பணிகளுக்கு இடையே, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருபவர் விக்னேஷ் சிவன்.
அதேபோல், நேற்றும் (ஜூன் 27) "ஞாயிற்றுக்கிழமை... சுவாரசியமான கேள்விகளை மட்டும் கேளுங்கள்" என்று தெரிவித்தார் விக்னேஷ் சிவன். அதனைத் தொடர்ந்து ரசிகர்களின் கேள்விகளும், விக்னேஷ் சிவனின் பதில்களும் பின்வருமாறு:
உங்களுக்கும் நயன்தாராவுக்கும் எப்போது திருமணம்? ஆவலுடன் காத்திருக்கிறோம்.
திருமணத்துக்கு எல்லாம் ரொம்ப செலவு ஆகும் ப்ரோ. இப்போது திருமணத்துக்குப் பணம் எல்லாம் சேமித்து வைத்துக் கொண்டிருக்கிறேன். கரோனா எப்போது போகும் என்றும் காத்துக் கொண்டிருக்கிறேன்.
நயன்தாரா பற்றி ஏதேனும் ஒரு ரகசியம்?
வீட்டில் டின்னர் முடிந்தவுடன் அவர்தான் அனைத்துப் பாத்திரங்களையும் கழுவுவார்.
உங்களுக்கு நயன்தாராவுடன் எந்த இடத்துக்குப் போனால் பிடிக்கும்?
அவருடன் செல்வதாக இருந்தால், எந்த இடமாக இருந்தாலும் எனக்கு ஓகேதான்.
நயன்தாராவுக்கு எந்த உடை அழகாக இருக்கும்?
அவரை சேலையில் பார்ப்பது பிடிக்கும்.
நீங்கள் பார்த்ததிலேயே சிறந்த மனிதர்?
நயன்தாராவின் தாயார் ஒமணா குரியன்.
நயன்தாராவுக்கு உங்களுடைய முதல் பரிசு?
தங்கமே பாடல்.
நயன்தாரா நடித்ததில் உங்களுக்குப் பிடித்த படம்?
ராஜா ராணி