2015ம் ஆண்டுக்கான கூகுள் இந்தியாவின் மொத்த தேடலில் 'பாகுபலி' இரண்டாம் இடத்தையும், படங்களின் பெயர் தேடலில் முதல் இடத்தையும் பெற்று சாதனை படைத்திருக்கிறது.
ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யாகிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'பாகுபலி'. மரகதமணி இசையமைத்த அப்படத்துக்கு செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவான இப்படம் இந்தியாவில் தயாரான படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனை படைத்தது. 'பாகுபலி' படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பணிகள் துவங்கப்பட்டு, விரைவில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், 2015 ஆண்டுக்கான கூகுள் தேடலிலும் 'பாகுபலி' சாதனை படைத்திருக்கிறது. இத்தகவலை 'பாகுபலி' படத்தின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள்.
2015 ஆண்டுக்கான மொத்த கூகுள் தேடலில் 'பாகுபலி' இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது. அதுமட்டுமன்றி கூகுள் தேடலின் படங்களின் பிரிவில் 'பாகுபலி' முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்திருக்கிறது.
இதே போன்று 2015ம் ஆண்டுக்கான ஃபேஸ்புக் தேடலில் 4ம் இடத்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.