தமிழ் சினிமா

3-டியில் உருவாகும் எந்திரன் 2: ரஜினிக்கு இணையான வேடத்தில் அக்‌ஷய்குமார்

செய்திப்பிரிவு

'எந்திரன்' படத்தின் 2-ஆம் பாகத்தில் முக்கிய வேடத்தில் இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் நடிக்கவுள்ளார். படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் 2010-ல் வெளியான 'எந்திரன்' மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்தது. எந்திரன் படத்தின் 2-ஆம் பாகம் குறித்த பல செய்திகள் கடந்த வருடங்களில் வந்த வண்ணம் இருந்தன. சில மாதங்களுக்கு முன், லைகா நிறுவனம் எந்திரன் 2-ஆம் பாகத்தை தயாரிக்கும் என செய்தி வெளியானது. ஏமி ஜாக்ஸன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்றும், ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் வில்லன் வேடத்தில் நடிக்கலாம் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன. எதுவும் இறுதி செய்யப்படாத நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக பலர் காத்திருந்தனர். நேற்று (15/12/15) ட்விட்டரில், இயக்குநர் ஷங்கர் நாளை முதல் ’எந்திரன் 2’ படப்பிடிப்பு துவங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஆனால் மேற்கொண்டு படக்குழு விவரங்கள் பற்றிய எந்த பகிர்வும் வரவில்லை. இன்று படம் குறித்த அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. ரஜினிகாந்த், ஏமிஜாக்ஸன் உள்ளிட்டோருடன், அக்‌ஷய் குமாரும் முக்கியமான வேடத்தில் நடிக்கவுள்ளார். அது வில்லன் பாத்திரமாக இருக்கலாம் என இப்போதே கணிப்புகள் துவங்கிவிட்டன. இசையைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, ஷங்கரின் ஆதர்ச கிராபிக்ஸ் மேற்பார்வையாளர் ஸ்ரீனிவாஸ மோகன், ஒலி வடிவமைப்பாளர் ரெசூல் பூக்குட்டி என படக்குழு விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் ஜெயமோகன் முதல்முறையாக ஷங்கருடன் இணைந்து இந்தப் படத்துக்கு வசனம் எழுதவுள்ளார். 3-டியில் படமாக்கப்படவுள்ள எந்திரன் 2-ஆம் பாகத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை லெகஸி எஃபக்ட்ஸ் என்ற அமெரிக்க நிறுவனம் கையாளவுள்ளது. இது 'ஜுராசிக் பார்க்', 'ஐயர்ன் மேன்', 'அவெஞ்சர்ஸ்' உள்ளிட்ட படங்களின் கிராபிக்ஸை கையாண்ட நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. இதோடு பல ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்களும் 'எந்திரன் 2'-ல் பணியாற்றவுள்ளனர். படத்தின் துவக்க விழாவை பிரம்மாண்டமாக திட்டமிட்டிருந்த தயாரிப்பு நிறுவனம், தமிழக மழை பாதிப்பின் காரணமாக எளிய முறையில் படத்தைப் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

SCROLL FOR NEXT