தமிழ் சினிமா

மும்பை நிறுவனத்துடன் கைகோத்தது ரஜினி முருகன்: பொங்கலுக்கு வெளியாகிறது!

ஸ்கிரீனன்

மும்பை நிறுவனமான பென் மூவிஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து 'ரஜினி முருகன்' படத்தை பொங்கலுக்கு வெளியிடுகிறது திருப்பதி பிரதர்ஸ்

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சமுத்திரக்கனி, சூரி உள்ளிட்ட பலர் நடிக்க பொன்.ராம் இயக்கி இருக்கும் படம் ’ரஜினி முருகன்’. இமான் இசையமைத்து இருக்கும் இப்படத்துக்கு பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது.

திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் கடன் சிக்கலில் சிக்கியதால், இப்படம் தயாரானாலும் வெளியீட்டில் சிக்கல் நீடித்து வந்தது. ஈராஸ் நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டிய கடன் மற்றும் இங்குள்ள பைனான்சியர்களிடம் வாங்கிய கடன் என அனைத்து தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது தயாரிப்பு நிறுவனம். ஈராஸ் நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டிய பணத்தில் பெரும் தொகையை கொடுத்துவிட்டதால், விரைவில் வெளியாகும் என்று தெரிவித்தார்கள்.

டிசம்பர் 4ம் தேதி வெளியாக இருந்த 'ரஜினி முருகன்', சென்னை வெள்ள பாதிப்பைத் தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொங்கலுக்கு வெளியீடு என்று விளம்பரப்படுத்தினார்கள். ஆனால், சில நாட்களாக தினசரிகளில் கொடுத்து வந்த விளம்பரம் நிறுத்தப்பட்டதால், இப்படம் வெளியாகுமா என்று விநியோகஸ்தர்கள் மத்தியில் குழப்பம் நீடித்து வந்தது.

இந்நிலையில், தற்போது 'ரஜினி முருகன்' பட வெளியீட்டில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துடன் கை கோத்திருக்கிறது பென் மூவிஸ் என்ற மும்பை பட நிறுவனம். இந்நிறுவனம் 'சிங் இஸ் ப்ளிங்', 'கஹானி' உள்ளிட்ட பல்வேறு இந்தி திரைப்படங்களை விநியோகம் செய்திருக்கிறது. மேலும் லிங்குசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் 'பையா' படத்தின் இந்தி ரீமேக்கையும் தயாரிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

பென் மூவிஸ் நிறுவனத்தின் லோகோவுடன் தற்போது 'ரஜினி முருகன்' பொங்கலுக்கு வெளியாகும் என்று விளம்பரப்படுத்தி வருகிறார்கள். திரையரங்க ஒப்பந்தப் பேச்சுவார்த்தை இன்று தொடங்கி நடைபெற்று வருவதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT