தமிழ் சினிமா

என்ன சொல்லப் போகிறது கதகளி?- விஷால் விளக்கம்

ஸ்கிரீனன்

பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கதகளி' படத்தின் கதைக்களம் மற்றும் திரைக்கதை அமைப்பு குறித்து விஷால் பேசியிருக்கிறார்.

விஷால், கேத்ரீன் தெரசா, நந்தகுமார் உள்ளிட்ட பலர் நடிக்க பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'கதகளி'. பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்து வருகிறார். விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் வழங்க பாண்டிராஜ் முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து வருகிறார்.

பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்தின் தமிழக உரிமையை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. இறுதிகட்டப் பணிகள் முடிந்து சென்சாருக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.

முதன் முறையாக 'கதகளி' படம் குறித்து, கதைக்களம் குறித்து வீடியோ பேட்டி ஒன்றில் விரிவாக பேசியிருக்கிறார் விஷால். அதில் 'கதகளி' குறித்து விஷால் கூறியிருப்பது:

"'கதகளி' என்பது ஒரு கலை வடிவம், எப்படி படத்தின் தலைப்புக்கு சரியாக இருக்கும் என்று கேட்டார்கள். "இனிமேல் இவன் கதகளி ஆட்டம் ஆடுவான்டா" என்று பேச்சுவழக்கில் சொல்லுவோம், அதைத் தான் படத்தின் தலைப்பாக வைத்திருக்கிறோம். இரண்டாம் பாதி கதைக்கு 'கதகளி' என்ற பெயர் பொருத்தமாக இருக்கும். ஒரே ஒரு தொலைபேசி அழைப்பால் ஒருவனுடைய வாழ்க்கையே மாறிவிடும். அது தான் 'கதகளி'. என்ன அழைப்பு என்பதை எல்லாம் படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

படத்தின் ட்ரெய்லருக்கு நிறைய வரவேற்பு கிடைத்தது. முக்கியமாக அனைவருமே செல்ஃபி காட்சியை ரசித்தார்கள். படத்தைப் பொறுத்தவரை ஒரு நாளில் நடக்கும் விஷயங்கள் தான் கதை. சென்னையில் தொடங்கி கடலூரில் முடிவடையும். தம்பா என்ற பாத்திரத்தைக் கொலை செய்திருப்பார்கள். அந்த கொலையை செய்தது யார் என்பது மாறி மாறி போய்க்கொண்டே இருக்கும். படத்தின் இறுதிக்காட்சியில் தான் தெரியவரும். இடைவேளைக்குப் பிறகு பாடல்களே கிடையாது. குறிப்பிட்ட ஒரு காட்சியில் இருந்து மழை ஒரு கதாபாத்திரமாக இருக்கும்.

ரொம்ப வித்தியாசமான திரைக்கதை அமைப்பு செய்திருக்கிறார் பாண்டிராஜ். பொங்கல் பண்டிகைக்கு எல்லாருமே ஜனரஞ்சகமான படம் பார்க்க விருப்பப்படுவார்கள். அதற்கு 'கதகளி' பொருத்தமாக இருக்கும்.

படத்தில் இரண்டு விதமான கெட்டப்களில் நடித்திருக்கிறேன். வெளிநாட்டில் இருந்து வரும் போது ஒரு லுக் இருக்கும். அப்புறம் படம் முழுக்க வரும் ஒரு லுக் இருக்கும். பாண்டிராஜ் படத்தில் விஷால் நடித்திருக்கிறான் அப்படின்னா 4 சண்டைக்காட்சிகள் இருக்கும் என நினைத்து வைத்ததில்லை.

நாயகனை துரத்திக் கொண்டே இருப்பார்கள், ஒரு கட்டத்தில் அவன் தப்பிக்க வேண்டும் என்றால் அடித்தே ஆகவேண்டும் என்ற சூழல் இருக்கும். அப்படித்தான் சண்டைக்காட்சிகள் இருக்கும். வேண்டும் என்றே சண்டைக்காட்சிகளை திணிக்கவில்லை" என்று தெரிவித்திருக்கிறார் விஷால்.

SCROLL FOR NEXT