தமிழ் சினிமா

சிம்பு, அனிருத் மீது சென்னை போலீஸார் வழக்குப்பதிவு: விரைவில் சம்மன் அனுப்ப முடிவு

செய்திப்பிரிவு

பெண்களை இழிவுபடுத்தி பாடல் வெளியான விவகாரம் தொடர்பாக நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இசையமைப்பாளர் அனிருத் இசையில், நடிகர் சிம்பு பாடிய தாக கூறப்படும் பாடல் ‘யூடியூப்' மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாடலில் பெண்களை இழிவுபடுத்தும் வகை யில் பாடல் வரிகள் இருப்ப தாகக் கூறி, நடிகர் சிம்பு, இசை யமைப்பாளர் அனிருத் ஆகியோர் மீது சென்னை, கோவை, தஞ்சாவூர், திருவண்ணாமலை, விருதுநகர் உட்பட தமிழகம் முழுவதும் பல காவல் நிலையங்களில் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

கோவையில் மாதர் சங்கத்தினர் கொடுத்த புகாரின்பேரில் சிம்பு, அனிருத் ஆகியோர் மீது ரேஸ்கோர்ஸ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெண்களை ஆபாசமாக சித்தரித் தல், பெண்களை இழிவுபடுத்து தல், தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள் ளன. இருவரையும் கடந்த 19-ம் தேதிக்குள் கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்பியிருந்த நிலையில், இருவர் சார்பிலும் அவர்களின் வழக்கறிஞர் கள் ஆஜராகி, கூடுதல் கால அவகாசம் கேட்டு கடிதம் கொடுத்துள்ளனர்.

நடிகர் சிம்பு, அனிருத் ஆகியோர் மீது சென்னை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திலும் பல அமைப்புகள் புகார் கொடுத் திருந்தன. தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் அதன் நிறுவனர் எஸ்.ஏ.பொன்னு சாமி கொடுத்த புகாரில், "எனது மனைவி, மகனுடன் சேர்ந்து யூடியூப் பார்த்துக் கொண்டிருந்தபோது இந்த பாடலை எதேச்சையாக கேட்க நேர்ந்தது. அதிலிருந்த பாடல் வரிகள் எங்களுக்கு தர்மசங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்திவிட்டது. இந்த பாடலை தயாரித்து வெளியிட்ட சிம்பு, அனிருத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த புகாரின்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர். தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், பெண் களை இழிவாக சித்தரித்தல் என 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர் அன்பழகன் இந்த வழக்கை பதிவு செய்துள்ளார். வழக்குப்பதிவை தொடர்ந்து இருவரையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

சிம்பு, அனிருத்துக்கு நெருக்கடி

தி.நகரில் உள்ள நடிகர் சிம்பு வீட்டை பெண்கள் அமைப்பினரும், வேறு சில அமைப்பினரும் கடந்த சில நாட்களாக முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் சிம்பு, அனிருத் ஆகிய இருவரின் உருவப் படங்களை தீயிட்டு கொளுத்தி போராட்டமும் நடத்தி வருகின்றனர். சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞர் காசி மற்றும் பாமக சார்பில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் கோவையை தொடர்ந்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் சிம்பு, அனிருத் ஆகிய இருவருக்கும் நெருக்கடி அதிகரித்துள்ளது.

SCROLL FOR NEXT