மலையாளத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கும் 'சார்லி' படத்தின் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற தயாரிப்பாளர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது.
கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கணக்கில் கொண்டு கேரளாவில் வெளியாகி இருக்கும் படம் 'சார்லி'. துல்கர் சல்மான், பார்வதி மேனன், அபர்ணா கோபிநாத், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தை மார்டின் ப்ராகாட் இயக்கி இருக்கிறார். ஃபைண்டிங் சினிமா என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருக்கிறது.
மலையாளத்தில் இப்படத்துக்கு இளைஞர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. வசூலிலும் இப்படம் முன்னணியில் இருந்துவருகிறது.
இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற தற்போதே தமிழ் திரையுலக தயாரிப்பாளர்கள் மத்தியில் போட்டி நிலவி வருகிறது.
இப்படம் குறித்து பேசிய முன்னணி தயாரிப்பாளர் ஒருவர், "இப்படம் ரீமேக் செய்யப்பட்டால் இங்கு இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும். 4 தயாரிப்பாளர்கள் இப்படத்துக்கு போட்டியிட்டு வருகிறார்கள். கண்டிப்பாக அடுத்த ஆண்டு தமிழில் இப்படம் ரீமேக்காகும்" என்று தெரிவித்தார்.
மேலும், இந்த ஆண்டு வெளியான 'ப்ரேமம்' படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்றுவதற்கும் தற்போது வரை போட்டிகள் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.